வாடகையில் அரைவாசியை மாத்திரம் அறவிடுமாறு வேண்டுகோள்

வாடகையில் அரைவாசியை மாத்திரம் அறவிடுமாறு வேண்டுகோள்-Reduce the Rent by Half-Government Request

பலக்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர் கல்வியைத் தொடரும் மாணவர்கள் மற்றும் தொழிலுக்காக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தங்கியிருந்து அந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களை வாடகைக்கு பெற்றுள்ளவர்களிடமிருந்து, கொவிட்-19 காலப் பகுதியில் மாதாந்த வாடகையின் அரைவாசியை மாத்திரம் அறவிடுமாறு வாடகை அறைகள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் கொரோனா அனர்த்த காலத்தில் வாடகைக் குடியிருப்பாளர்கள், வாடகை சிறு வியாபாரிகள் ஆகியோர் உரிமையாளர்களுக்கு வாடகை கட்டமுடியாமல் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் மனிதாபிமான அடிப்படையில் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவையிலேயே இந்த விடயம் தொடர்பான கோரிக்கை ஒன்றை        அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ளார்.

அமைச்சரவையில் இந்த விடயத்தை முன்னிறுத்தி  உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது நாடு இயல்பு நிலைக்க திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாடகை பிரச்சினையால் வாடகை கூடியிருப்பாளர்கள் படும் இன்னல்களை சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக வாடகை கட்டடங்களை வாடகைக்கு பெற்றவர்களுக்கு வழங்கியவர்களும் தமது பொருளாதார வருமானத்துக்காகவே வழங்கியிருந்தனர். அதேபோல் வாடகைக்கு பெற்றுக்கொண்டவர்களும் தமது மாதாந்த தொழிலை மையமாக கொண்டே பெற்றிருந்தனர். அந்த வகையில் நாட்டின் இன்றைய சூழ்நிலையில் வாடகைக்கு கடைகளை, வீடுகளை, அறைகளை வழங்கியுள்ள உரிமையாளர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொள்ள வேண்டுமெனவும், அரசும் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தார்.

உரிமையாளர்கள் பாதிக்காத வகையிலும் வாடகைக்கு பெற்றவர்கள் நெருக்கடியை சந்திக்காத வகையிலும் வாடகைப் பணத்தை குறைத்து அல்லது காலந்தாழ்த்தியோ செலுத்தும் வகையில் இருதரப்பினரதும் நியாயங்களை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் மானியங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே இந்த மனிதாபிமானம் மிக்க கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் இது தொடர்பில் உடனடி கவனத்தை செலுத்தவேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, அதனை ஆராய்வதாக தெரிவித்ததுடன் இது தொடர்பில் மனிதாபிமான அடிப்படையில் நடக்குமாறு வீடு மற்றும் கடைகளின் உரிமையாளர்களிடம் அரசு கேட்குமெனவும் தெரிவித்துள்ளார்

இதனிடையே நாளாந்த வருமானமின்றி தவிக்கும் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறு தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு தொழிலை முன்னெடுக்க முடியாதுள்ளவர்களுக்கு அனர்த்த நிவாரணமாக வழங்கப்படும் 5,000 ரூபாவை வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கைவிடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thu, 05/07/2020 - 11:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை