தமிழ் மக்கள் விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டில் அரசு

தமிழ் மக்கள் விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டில் அரசு-Sumanthiran on Meeting with PM at Temple Trees

பேச்சில் உணர முடிகிறது
- வெளிச்சக்திகளின் தலையீட்டால் வரும் குழப்பங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
- எமது கோரிக்கைகளை பிரதமர் நிராகரிக்கவில்லை
- கிளிநொச்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட 500 ஏக்கர் காணியை உடன் விடுவிக்கவும் பிரதமர் உத்தரவு
- 71 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை அவசர முடிவெடுப்பதாக பிரதமர் உறுதி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமாக காணப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காணப்படும்போதும் திட்டத்தை முன்னெடுக்கும் தருணத்திலும் வெளிச்சக்திகளால் ஏற்படக்கூடிய  குழப்பங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நாம் பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளோமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் தினகரனுக்கு நேற்று தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முற்படுகின்றபோது தென்னிலங்கையின் பெரும்பான்மை  சக்திகளின் குறுக்கீடு காரணமாக அனைத்து முயற்சிகளும் தவிடுபொடியானது  என்பதை நாம் மறந்து விடக்கூடாது என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமரிடம் சுட்டிக்காட்டி  வலியுறுத்தியது.

இதனடிப்படையில் பிரதமர் எதிர்காலத்தில் ஆரோக்கியமான நடைமுறைகளை பின்பற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இந்த பேச்சு வார்த்தையையும் நாங்கள் முன்னெடுத்தோம் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

தென்னிலங்கையின் பெரும்பான்மை கட்சிகள் அரசுகள் அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் மறைந்த வாக்குறுதிகளாகவே வரலாறு காட்டித் தந்துள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குறுதி குறித்து உடனடியாக எம்மால் எதனையும் தெரிவிக்க முடியாது.

கடந்த திங்கட்கிழமை பிரதமர் கூட்டிய கூட்டத்திலும் மாலையில் அவருடனான தனிப்பட்ட சந்திப்பிலும் ஒரு நப்பாசை அடிப்படையிலும் ஜனநாயக நடைமுறையில் நாங்கள் கலந்துகொண்டோம். தமிழ் மக்கள் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது.

எமது கோரிக்கைகளை பிரதமர் எந்த ஒரு கட்டத்திலும் நிராகரிக்கவில்லை. ஆனால் காரிய சித்தியுடன் பிரதமரும் அரசும் நடந்து கொள்ளுமா? என்பது தான் இங்கு கேள்வியாக உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

நாம் முன்வைத்த கோரிக்கைகள் பலவற்றை சாதகமாக பரிசீலித்து உடன் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்து நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

எப்போதும் நாம் அரசுத் தரப்புடன் பேச்சு வார்த்தைக்கு நம்பிக்கையுடன்தான் செல்கின்றோம் அரசாங்கம் நம்பகத் தன்மையை வெளிப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றோம். காலம் கடத்தும் செயற்பாடுகளால் தமிழினம் நம்பிக்கை இழந்து காணப்படுவதாக பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  இங்கு சுட்டிக்காட்டினார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தான் ஜனாதிபதியுடன் பேசி சாதகமான தீர்வை பெற்றுத்தர முயற்சிப்பதாக பிரதமர் உறுதியளித்தார். இதுபோன்ற உத்தரவாதங்கள்  கடந்த காலங்களிலும் தரப்பட்டன அரசு நம்பகத் தன்மையுடன் செயல்பட வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம். எப்போதும் நாம் நம்பிக்கையுடன் தான் சந்திக்கின்றோம் இந்தத் தடவையும் அவ்வாறே நடந்து கொண்டோம் கிளிநொச்சியில் வனவள திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட 500 ஏக்கர் விவசாய காணிகளை உடன் விடுவிக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இவை உடனடியாக நடைமுறைச் சாத்தியமாக வேண்டுமென்பதே எமது அவாவாக உள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மிக நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருக்கின்றது. இது சர்வதேச மட்டத்திலும் கவனயீர்ப்பை பெற்றுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றுபட்டு அவர்களின் விடுதலைக்கு  நீதியான தீர்வைப் பெற்றுத்தர வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.

71 தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் வழக்கில் உள்ளது. இந்த வழக்குகளை உடன் விசாரணைக்கு எடுத்து அவர்களை விடுவிப்பதில், தான் மிகஅக்கறை கொண்டிருப்பதாக பிரதமர் எம்மிடம் தெரிவித்தார். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் தொடர்பு கொண்டிருப்பதால் இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விரைவாக அவர்களது விடுதலைக்கு முயற்சிப்பதாகவும் பிரதமர் உறுதியளித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பில் விடுவிக்க முடியுமென நான் வெளியிட்ட கருத்தை பிரதமர் உடனடியாக கவனம் எடுத்து ஜனாதிபதியுடன்  இது தொடர்பில் பேசி ஒரு அவசர முடிவு எடுப்பதாக உறுதியளித்தார்.

இதில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? எனக் கேட்ட போது,

நாம் எப்போதும் நம்பிக்கையுடன்தான் சந்திக்கப் போகின்றோம். நம்பகத்தன்மையை அரசு தான் வெளிப்படுத்த வேண்டும். இம்முறை நம்பிக்கையுடன்தான் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டோமென சுமந்திரன் தெரிவித்தார்.

பிரதமருடனான சந்திப்பின் போது அவர்  எம்முடன் கலந்துரையாடிய விதம் எமக்கு நம்பிக்கை ஊட்டுவதாக தான் காணப்படுகிறது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் தான்  அதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் அரசின் சாதக போக்கைக் காண முடிகிறது. அதன் பிரதிபலன் எவ்வாறாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளதெனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு விரைவாக பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற தொணியில்தான் பிரதமர் கலந்துரையாடினார். கடந்த காலங்களில் கூட பிரதமர் இவ் விடயத்தில் அக்கறை காட்டியதை எம்மால் மறந்துவிடமுடியாது.

அரசாங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருப்பது போன்று தான் பேச்சுக்களை அவதானிக்கும்போது எண்ணத் தோன்றுகிறது. அதற்கான திட்டங்களை வெளிப்படைத் தன்மையுடன் தான் அரசு முன்னெடுக்க வேண்டுமென நாம் எதிர்பார்க் கின்றோம். எமது நிலைப்பாடுகளை நாம் பிரதமரிடம் வலியுறுத்திக் கூறிவிட்டோம். அதன் விளைவுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்தெனவும் அவர் தெரிவித்தார்.

எம் ஏ எம் நிலாம் 

Fri, 05/08/2020 - 11:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை