நீண்ட அரசியல் இழுபறிக்குப் பின்னர் இஸ்ரேலில் ஐக்கிய அரசு பதிவியேற்கு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இஸ்ரேல் வரலாற்றில் நீடித்த மிகப்பெரிய அரசியல் இழுபறிக்கு முடிவுகட்டும் வகையில் ஐக்கிய அரசாங்கம் ஒன்று பதவியேற்றுள்ளது.

அதிகார பகிர்வு அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய அரசில் தற்போதைய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அடுத்த 18 மாதங்களுக்கு தமது பதவியில் நீடிக்கவுள்ளார்.

அவரது போட்டியாளரான மையசார்பு பென்னி கான்ட்ஸ் இந்தக் காலப்பிரிவில் துணைப் பிரதமராக செயற்பட்டு பின்னர் பிரதமர் பதவியை ஏற்கவுள்ளார்.

இதில் ஜூலை 1 ஆம் திகதிக்குள் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதிகளை இஸ்ரேலிய ஆட்புலத்திற்குள் சேர்ப்பதற்கும் இரு தலைவர்களும் இணங்கியுள்ளனர். இதனை பலஸ்தீன தலைவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

இஸ்ரேலில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. 2ஆவது முறையாக அதே ஆண்டு செப்டம்பரில் தேர்தல் நடைபெற்றது. அதிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆளும் கட்சிக் கூட்டணியும், எதிர்க்கட்சிக் கூட்டணியும் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதிகாரப் பகிர்வில் உடன்பாடு எட்டப்படாததால் அதற்கான பேச்சுவார்த்தை முறிந்து இஸ்ரேல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஓராண்டுக்குள்ளாக 3ஆவது முறையாக பாராளுமன்றத் தேர்தல் நடந்தது. கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி நடைபெற்ற தேர்தலிலும் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தேசிய ஒற்றுமை அரசை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை நெதன்யாகுவும் கான்ட்ஸும் தற்போது மேற்கொண்டுள்ளனர்.

தன் மீதாக ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுக்க ஒருசில நாட்கள் இருக்கும் நிலையிலேயே புதிய அரசு உருவாக்கப்பட்டுள்ளது.

Tue, 05/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை