கைதான கற்பிட்டி நபரின் அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்கள் மீட்பு

கைதான கற்பிட்டி நபரின் அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்கள் மீட்பு-Easter Sunday Attack-SP-Jaliya Senaratne-2020-05-04

அரச சார்பற்ற நிறுவனத்திற்கு நிதி வழங்கிய பற்றுச்சீட்டுகள் பள்ளிவாசலொன்றில் மீட்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டுள்ள விசாரணைகளுக்கமைய நேற்று (03) கற்பிட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நடாத்திச் சென்ற பள்ளிவாசல் ஒன்றின் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் பல்வேறு ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பு 15 இலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடாத்திச் சென்ற அலுவலகத்தில் இருந்த பல்வேறு ஆவணங்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆவணங்கள் மூலம் இந்த அமைப்புக்கு நிதி வழங்கிய நபர்கள் மற்றும் நிதி தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றையதினம் (04) குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவற்றை பரிசோதித்தபோது சந்தேகநபர் பொறுப்பாக இருந்த குறித்த அரசசார்பற்ற நிறுவனத்திற்கு பல்வேறு வகையிலான நிதிகள் கிடைக்கப்பெற்றுள்ளமை தொடர்பான  பல்வேறுபட்ட பற்றுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குறித்த இடத்திற்கு சீல் வைத்து அதனை பொலிஸ் பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த அரச சார்பற்ற   நிறுவனத்தின் தலைமையகமாக செயற்பட்டு வந்த  புத்தளத்தில் உள்ள நிறுவனத்தையும் சீல் வைத்து பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் தீவிரவாத தடுப்பு தற்காலிக சட்டதிட்டத்தின் கீழ், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபரின் மூலம் தீவிரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

இதன் மூலம் விசாரணைகளை மிகத் துரிதமாக மேற்கொண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது பண பற்றுச்சீட்டுகள் மாத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பிலான வங்கி கணக்குகள் மற்றும் பணம் செலவிடப்பட்ட விதம் உள்ளிட்ட ஏனைய விபரங்களை சேகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Mon, 05/04/2020 - 22:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை