தமிழ் கூட்டமைப்பு அரசோடு முரண்படாமல் இருந்தால் பல விடயங்களை வெல்லலாம்

கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிவநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளும் அரசோடு முரண்படாமல் இருந்து வந்தால் அரசியலில் பல விடயங்களை வெற்றி கொள்ளலாம் என கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி த.சிவநாதன் தெரிவிக்கிறார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆளும் அரசோடும் அதன் பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ஷவோடும் பொதுவான பேச்சுவார்த்தையிலும், விசேட பேச்சு வார்த்தையிலும் கடந்தவாரம் கலந்கொண்டிருந்தது. இதன்போது பல தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பிரதம மந்திரியிடம் நேரில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அது தொடர்பாக பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ஷ நடவடிக்கைகளை சாதகமாய் செயற்படுத்துவதற்கு ஒரு ஒப்புதலை தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதையிட்டு மிக அடக்கமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடந்துகொண்டது.

ஆளும் அரசின் பல முக்கிய அமைச்சர்கள் இக்கலந்துரையாடல்களில் பிரதம மந்திரிக்கு உறுதுணையாக இருந்தனர். இதுபற்றி பத்திரிகைகளுக்கு கருத்து வெளியிட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழத் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ. ஸ்ரீநேசன் அங்கு பேசப்பட்ட விடயங்களையிட்டு விரிவாக எதையும் தெரிவிக்கவில்லையாயினும் அங்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையிட்டு ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார். இதுபற்றி உங்களின் கருத்து எப்படியிருக்கிறது என ஊடகவியலாளர்கள் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி த.சிவநாதனிடம் கேள்விகளை முன்வைத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இதுபற்றி மேலும் விபரிக்கையில் அரசியலில் சாதிக்க விளைவது என்ன? தமது கட்சிக்கார்களின் கோரிக்கைகளை வென்று எடுப்பதாகும். இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். தமிழத் தேசிய கூட்டமைப்பு பழமை வாய்ந்தது. அதற்கு அரசியல் சாணக்கியம் தெரியாமலில்லை.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அரசியலை நன்கு கற்றவர். அதைவிட சம்பந்தர் ஐயா, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் இவர்களுக்கெல்லாம் யாரும் புத்தி சொல்ல வேண்டிய தேவையில்லை.

தமிழ்மக்களின் தேவைகள் பல வகைப்பட்டன. இவைகளை இரு பிரதான பிரிவுகளுக்கு வகைப்படுத்தலாம். முதலாவது அரசியல் தீர்வு தொடர்பானது, இரண்டாவது அபிவிருத்தி தொடர்பானது இவைகளை தீர்ப்பதாயின் ஆளும் அரசின் ஒப்புதல் அவசியமாகும். ஆளும் அரசு தலையசைக்காமல் எதுவும் நடந்துவிடப்போவதில்லை

ஆதலால் இப்போதைக்கு மாத்திரமல்ல, எப்போதுமே ஆளும் அரசோடு சேரவேண்டும். அப்படி சேர முடியாவிட்டால் அல்லது விருப்பமில்லாவிட்டால் அதனோடு முரண்படாமலாவது இருக்க வேண்டும்.

இதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செய்யத் துணிந்து விட்டதாக ஊடகங்களில் செய்திகள் பட்டும் படாமலும் தெரிவிக்கின்றன. இதுபற்றி நான் எதையும் அறுதியிட்டு சொல்ல முடியாது.

ஆயினும் தமழ்க் கட்சிகள் எதுவாக இருந்தாலும் தமிழ் மக்களின் நன்மையைத் தவிர வேறொன்றையும் குறிக்கோளாக கொண்டிருக்கப் போவதில்லை. ஆதலால், கொள்கைப்பற்றோடும். நோக்கத்தை அடையும் பாணியிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பயணிக்குமாயிருந்தால் அதனால் கிடைக்கப் போவது தமிழ் மக்களுக்குரிய வெற்றியாகும். எதற்கும் காலம் பதில் சொல்லும் என்றார்.

புளியந்தீவு குறூப் நிருபர்

Mon, 05/11/2020 - 10:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை