டிரம்ப் ட்விட்டுக்கு உண்மையை சரிபார்க்க ட்விட்டர் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதிவிட்ட ட்வீட்டுக்கு ட்விட்டர் நிறுவனம் முதல் முறை உண்மையை சரிபார்க்கும்படி அடையாளம் இட்டுள்ளது.

அஞ்சல் வாக்குச்சீட்டுகள் குறித்து அவர் இட்டிருக்கும் பதிவுகள் பொய்யானதாக இருக்கும் என்றும் உண்மையை சரிபார்க்கும்படியும் பயனர்களை எச்சரித்துள்ளது.

டிரம்பின் அரசியல் கருத்துகளை தனிக்கை செய்யாமல் பதிவிட்டு வந்த ட்விட்டர் நிறுவனம் அதில் முக்கிய மாற்றத்தை கொண்டுவந்திருப்பதை இது காட்டுகிறது. போலிக் கணக்குகள் மற்றும் போலிச் செய்திகளுக்கு அனுமதி அளிப்பதாக ட்விட்டர் மீது விமர்சனங்கள் எழுந்தபோதும் அந்த நிறுவனம் அண்மைய ஆண்டுகளில் இது தொடர்பான தனது கொள்கைகளை கடுமையாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை சாடியிருக்கும் டிரம்ப், 2020 ஜனாதிபதி தேர்தலில் ட்விட்டர் தலையிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

“கருத்துச் சுதந்திரத்தை ட்விட்டர் முழுமையாக திணறவைக்கிறது. ஜனாதிபதியாக அதற்கு நான் அனுமதிக்கப்போவதில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டரில் 80 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்வோரைக் கொண்ட ட்ரம்ப், கடந்த செவ்வாய்க்கிழமை காலை பதிவிட்ட ட்விட்டரில், தபால் வாக்குச்சீட்டுகள் ‘கணிசமான மோசடி கொண்டது’ என்றும் இது தேர்தல் மோசடிக்கு இட்டுச்செல்லும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் கலிபோர்னிய ஆளுநரையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார். இந்த ட்விட்டர் பதிவிட்டு ஒருசில மணி நேரத்தில் அந்த ட்விட்டுக்கு நீல நிற ஆச்சரியக் குறியால் எச்சரிக்கை அடையாளம் இடப்பட்டது. இதன்மூலம் வாசகர்கள் இந்த தபால் வாக்குச்சீட்டுக் குறித்து உண்மையை சரி பார்க்க அறிவுறுத்தப்படுகிறது.

இதுகுறித்து ட்விட்டர் நிர்வாகம் கூறுகையில், ‘ஜனாதிபதி ட்ரம்ப்பின் ட்வீட்கள் நிர்வாகத்தின் விதிகளை மீறவில்லை. ஆனால் அவர் கூறிய கருத்து நம்பகத்தன்மையற்றதாக இருந்ததால், பயனர்கள் அதுகுறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என விளக்கமளித்தது. 

போலியான மற்றும் தவறாக வழிநடத்தும் பதிவுகளுக்கு எச்சரிக்கை அடையாளம் இடுவதை அதிகரிப்பதற்கு சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர் உறுதி அளித்தபோதும் அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக அதனை முன்னெடுப்பதில் தாமதம் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வரிகளை டிரம்ப் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு 170,000 பேர் பதிலளித்திருப்பதோடு 17,000 தடவை பகிரப்பட்டுள்ளது.

Thu, 05/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை