கம்பஹா மாவட்டத்திலும் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவோம்

“கண்டிக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவை என்று ஆசைப்படுபவர்களுக்கு, கண்டியில் இருந்து ஒன்றும் கம்பஹாவில் இருந்து ஒன்றும் என்று இரு கண்டி காரர்களை பெற்றுக்கொள்ள, தமது முழு பங்களிப்பையும் வழங்குவதற்கான சந்தர்ப்பம் எழுந்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள் அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

”கொழும்பு மாவட்டத்துக்கு அடுத்ததாக மிக பெரிய வர்த்தக செயற்பாடுகள் கொண்ட மாவட்டமாக கம்பஹா மாவட்டம் திகழ்கின்றது. அண்மைய ஒரு தசாப்த காலத்தில் மிக வேகமாக தமிழ் மக்களின் சனத்தொகை அதிகரித்துவரும் மாவட்டம் இது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவானோர் புதிதாக சென்று குடியேறுகின்ற மாவட்டமாக காணப்படுகின்றது.

இங்கு தமிழ் மொழி பேசுபவர்கள் என்ற அடிப்படையில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பரவி இருக்கின்றார்கள். இங்கே தமிழருக்கும், தமிழ் பேசுபவர்களுக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் தேவை கடந்த பல வருடங்களுக்கு முன்னரே ஏற்பட்டுவிட்டது.

பொதுவாக மலையகம் சார்ந்த தலைவர்கள், இருக்கின்ற பாராளுமன்ற ஆசனத்திற்கு சண்டை போட்டுக்கொள்வார்கள். ஆனால் புதிய ஒரு பாராளுமன்ற ஆசனத்தை ஏற்படுத்த முயற்சிசெய்ய மாட்டார்கள். ஆனால் மனோ கணேசன் அதிலிருந்து மாறுபட்டவர். சவால்களை எதிர்நோக்கி, எங்களது உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கும் இடங்களில் அதனை அடைவதற்காக முன் செல்பவர். தூர நோக்கிலே கணிப்புகளை முன்வைப்பவர்.

அதன்படி சில வருடங்களுக்கு முன், கம்பஹா மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்தின் தேவையை அவர் உணர்ந்தார். அந்த பாதையிலே வளர்ந்து வந்து ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினராக வத்தளை மாபோல நகர சபையிலே சசிகுமார் இருக்கின்றார்.

சசிகுமாரின் மக்கள் பணி மிக வேகமாக முன்னோக்கி செல்கின்றது. மக்கள் ஆதரவும் மிக வேகமாக உயர்வடைந்து இருக்கின்றது. பல்லின மக்களின் ஆதரவு இன்று அவருக்கு உருவாகி இருக்கின்றது. மனோ கணேசனின் வழியிலே வீதியில் நின்று, மக்களோடு மக்களாக மக்கள் பணி செய்வதில் இன்னுமொரு எடுத்துக்காட்டாக அவர் இருக்கின்றார்.

முக நூல் போராளிகளுக்கு தமது சமூகத்திற்காக குரல் கொடுக்கும் இன்னுமொரு வாய்ப்பு இது. எமது மக்களை நேசிப்பவர்கள், அரசியல் அனாதைகளாக இருக்கும் கம்பஹா மாவட்ட தமிழ் மக்களுக்கு தமது அரசியல் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள பங்களிக்க முடியும்.

கண்டிக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவை என்று ஆசைப்படுபவர்களுக்கு, கண்டியில் இருந்து ஒன்றும் கம்பஹாவில் இருந்து ஒன்றும் என்று இரு கண்டி காரர்களை பெற்றுக்கொள்ள, தமது முழு பங்களிப்பையும் வழங்குவதற்கான சந்தர்ப்பம் எழுந்திருக்கின்றது எனக் கூறியுள்ளார்.

Sat, 05/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை