தோட்டங்களை துண்டாட முயற்சி; போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்

ஹொரணை பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா மானெலு தோட்டத்தில் தேயிலை மலைகளை துண்டாடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தோட்டத்தில் கொரோனா தொற்றுப்பரவுவதாக தெரிவித்து தேயிலைச் செடிகளைக் கொண்ட ஒரு பகுதியினை தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுத்து அதிலிருந்து கொழுந்து பறிப்பதற்கு அழுத்தம்; கொடுப்பதாகவும் அவ்வாறு செய்யாது கொழுந்து பறிப்பவர்களுக்கு நாள் சம்பளத்தை வழங்க தோட்ட நிர்வாகம் மறுப்பதாகவும் தேயிலைக் கொழுந்து நிறுப்பதற்கு தராசுகளையும் லொறியையும் அனுப்பாது விடுவதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தேயிலை மலைகள் துண்டாடப்பட்டு வழங்குவதன் மூலம் தங்களுக்கு ஒருநாள் சம்பளத்துக்குத் தேவையான கொழுந்து அளவினை பறிக்கமுடியாது உள்ளதாகவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாரிய இடைவெளியிலேயே கொழுந்துகளை பறிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் சிறுத்தையோ தேணிக்களோ ஒருவரை தாக்கினால் காப்பாற்றக்கூட முடியாதநிலை ஏற்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தொழிலாளி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

தோட்ட நிர்வாகம் தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கைகழுவுவதற்கு வசதிகள் செய்து கொடுக்கவில்லை. கொழுந்து நிறுக்கும் போது சுகாதாரப் பொறி முறைகள் பேணப் படுவதில்லை.

கடந்த 24ம் திகதி முதல் துண்டாடப்பட்டு கொழுந்துகளை பறிக்க நிர்ப்பந்தித்தனர். இதற்கு மறுப்புத் தெரிவித்து வழமையான கொழுந்து பறிப்பில் ஈடுபட்டதால் பறித்த சுமார் 450 கிலோவுக்கு மேற்பட்ட தேயிலைக் கொழுந்துகளை கோயிலுக்கு அருகாமையில் வீசியுள்ளனர்.

இவர்களின் அநீதியான செயல் குறித்து பேசுவதற்கு எவரும் முன்வருவதில்லை.

இதனால் தொழிலாளர்கள் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்து தங்களுக்கு சம்பளமோ நிவாரணமோ இல்லாத நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றோம் எனவும் அவர் கூறினார்.

(ஹட்டன் விசேட நிருபர்) 

Tue, 05/05/2020 - 10:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை