சம்பந்தனுடன் பயணிக்க முடியாது என்ற உண்மையை சுமந்திரன் தெரிவித்துள்ளார்

விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டாம் என போராட்டம் நடத்திய ரெலோவும், விடுதலைப்புலி உறுப்பினர்களை கலைத்து கலைத்து சுட்டுக்கொன்ற ஈ.பி.ஆர்.எல்.எப்.க்கும் விடுதலைப்புலிகள் மீது எப்படி புதிதாக பற்று வந்தது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கேள்வியெழுப்பியுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கூறுகையில்,

சுமந்திரன் காலம் கடந்தாலும் உண்மைகளை தற்போது வெளியிட்டுள்ளமை பாராட்டத்தக்கது. விடுதலைப்புலிகள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்துக்களாக அமைந்தாலும், சம்பந்தன் தொடர்பில் அவர் உண்மைகளை காலம் கடந்தாலும் வெளிப்படுத்தியுள்ளார். அதனை பாராட்டியே ஆகவேண்டும்.

சம்பந்தன் கூறும் அத்தனைக்கும் தலை அசைத்துவந்தாலும் தொடர்ந்தும் அவருடன் பயணிக்க முடியாது என்ற நிலை சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த உண்மைகளை சுமந்திரன் 6 ஆண்டுகளிற்கு முன்னரே தெரிவித்திருக்க வேண்டும். ஆனாலும் தற்போது எனினும் குறித்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளமை பாராட்டத்தக்கது.

இவ்வாறான  நிலையில் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகியோர் கருத்துக்கள் தெரிவிப்பது தற்போதுள்ள நிலையில் தமது சுயலாபத்திற்காகவே. விடுதலைப்புலிகளுடன் பேசவேண்டாம் என போராட்டம் நடத்திய அடைக்கலநாதனிற்கு இன்று எவ்வாறு பற்று வந்தது?.

விடுதலைப்புலி உறுப்பினர்களை கலைத்து கலைத்து சுட்டுக்கொன்ற ஈ.பி.ஆர்.எல்.எப். தரப்பினர்களுக்கு விடுதலைப்புலிகள் மீது புதிதாக பற்று எப்படி வந்தது என்றார்.

பரந்தன் குறூப் நிருபர்

Wed, 05/13/2020 - 14:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை