குரோத அரசியல் செய்வதிலேயே சஜித் தலைமையிலான அணி ஆர்வம்

சிரேஷ்ட அமைச்சர்கள் விமர்சனம்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அவருடன் இணைந்திருக்கும் சகாக்களும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு வருவதாக கடுமையாக சாடியுள்ள ஆளும்கட்சி தரப்பினர். கனவான் அரசியலுக்குப் பதிலாக குரோத அரசியல் செய்வதிலேயே அத்தரப்பினர் ஆர்வம் செலுத்துவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிரேஷ்ட அமைச்சர்களான பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி ஆகியோர் சஜித் அணியை கடுமையாக விமர்சிக்கின்றனர். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது தரப்பினரும்  நடந்துகொள்ள வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளர். இன்று மக்கள், சஜித் மீது அவரது தரப்பினர் மீதும் நம்பிக்கை இழந்து காணப்படுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போது, சஜித் தரப்பு பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சியாக காணப்படவில்லை. இன்று அவர்கள் மூன்றாம்தர அரசியல் செயல்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். மறைந்த ஜனாதிபதியான, நேர்மையான அரசியல்வாதியாக திகழ்ந்த தனது தந்தைக்கு களங்கம் ஏற்படும் வகையில் சஜித் பிரேமதாச நடந்து கொள்கிறார். ஒரு கட்சியின் அல்லது நாட்டின் தலைமைத்துவத்துக்குரிய ஆளுமை சஜித்திடம்  காணப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் மாணவனாக சஜித்தை காண முடியாதுள்ளது. இன்று அவர் கோமாளிகள் கூட்டத்தின் தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றார் எனக் குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இங்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,  நாட்டின் ஜனாதிபதியாக கனவு கண்ட சஜித் இன்று  பிரதமராகவும் அரசாங்கத்தை பொறுப்பேற்கும் கனவு காண்கின்றார்.

வரக்கூடிய தேர்தலில் சஜித் தரப்பால் பிரதான எதிர்க்கட்சியாக கூட வரமுடியாது. முதலில்  அரசியல் ராஜதந்திரங்களையும் ஜனநாயக வழிமுறைகளையும் பாடம் எடுக்க வேண்டும். தம்மோடிருந்த காடையர்களை பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை பறித்து கொண்டவரென்ற வரலாற்றை நாம் நன்கறிவோம்.  அன்று  ஐக்கிய தேசியக் கட்சியில் காணப்படும் உட்கட்சிப் பூசல்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் நாம் கௌரவமாக அதிலிருந்து வெளியேறினோம். சஜித் அணியினர் போன்று நாம் ரணிலுக்கு குழிபறிக்க முற்படவில்லை என்றார்.

எம். ஏ. எம். நிலாம்

Tue, 05/26/2020 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை