கரும்பு செய்கையாளர்களுக்கும் காணி உரிமையாளர்களுக்கும் இடையில் முறுகல்

அட்டாளைச்சேனை ஆலம்குளத்தில் பதற்றம் ; கரும்புச் செய்கை இடைநிறுத்தம்

தமது விருப்பத்திற்கு மாறாக தமது காணிகளில் தொடர்ச்சியாக கரும்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதனால், பாரிய நஷ்டத்தினை தாம் எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டி அட்டாளைச்சேனை ஆலம்குளம் பகுதியில் நேற்று (12) கரும்புச் செய்கை ஆரம்பிக்கப்பட்டபோது கரும்புச் செய்கையாளர்களுக்கும் காணி உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட குழப்ப நிலையினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இப்பகுதியில் நிலவிய பதற்ற நிலையினை அடுத்து அப்பகுதிக்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸார் நிலைமையினை சுமூகமாக்கியதுடன், (14) - நாளை அம்பாறை மாட்ட செயலாளருடன் கலந்துரையாடி இவ்விடயம் தொடர்பில் சுமூக தீர்வினைப் பெறும் வரை இப்பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த கரும்புச் செய்கையினையும் இடைநிறுத்தியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் காணி உரிமையாளர்களுக்கும் கல்லோயா பெருந்தோட்ட தனியார் கம்பனி நிருவாகிகளுக்கும் இடையே சுமூகமான தீர்வு எட்டப்படாமல் காணப்பட்டு வருவதனாலேயே இம்முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

தமக்கு இலாபம் ஈட்டித் தரக்கூடிய வகையில் கரும்புச் செய்கையினை மேற்கொள்ளுதல் எமது நிலத்தினை குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொண்டு கரும்புச் செய்கையினை மேற்கொள்ளுதல் அல்லது எமது நிலத்தில் கரும்புச் செய்கை மேற்கொள்பவர்கள் தமக்கு குறித்த பணத் தொகையினை மாதாந்தம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தல் போன்ற கோரிக்கைகளை இக்காணி உரிமையாளர்கள் முன்வைத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம், வரிப்பத்தான்சேனை, வாங்காமம், அக்கரைப்பற்று, நுரைச்சோலை, அட்டாளைச்சேனை, ஆலங்குளம், சம்மாந்துறை, ஹிங்குராண, அம்பாறை ஆகிய பிரதேசங்களில் கரும்புச் செய்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதிகளவில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 5200 ஹெக்டயர் நிலப்பரப்பு அரசின் கரும்புச் செய்கைத் திட்டத்தின் கீழ் கடந்த பல வருடங்களாக கரும்புச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடும் காணி உரிமையாளர்கள், இக்கரும்புச் செய்கையினால் போதிய வருமானம் இன்றிக் காணப்படுவதனால் இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தில் பாதிப்பினையும் ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கரும்புச் செய்கை பண்ணப்பட்டு வரும் இந்த 5200 ஹெக்டயர் நிலப்பரப்பில் நெல் விவசாயத்தினை மேற்கொள்வதன் மூலம் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் அம்பாறை மாவட்ட நெற் செய்கை பாரிய பங்களிப்பினை ஈட்டித் தரும் என சுட்டிக்காட்டும் காணி உரிமையாளர்கள், ஒரு ஹெக்டயர் நிலப்பரப்பில் சுமார் 65000 கிலோகிராம் நெல் உற்பத்தி மேற்கொள்ள முடியும் எனவும் இதனால் 5200 ஹெக்டயர் நிலப்பரப்பில் இருந்தும் சுமார் மூன்று கோடி 20 இலட்சம் கிலோகிராம் நெல்லினை உற்பத்தி செய்து இரு போகங்களிலும் சுமார் 330 கோடி ரூபா பணத்தினை வருமானமாக ஈட்டிக் கொள்ள முடியும்.

ஆனால், இந்நிலப்பரப்பில் கரும்பு உற்பத்தி செய்வதனால் பத்தாயிரம் மெற்றிக் தொன் கரும்பினை மாத்திரமே உற்பத்தி செய்ய முடியும் எனவும் இதனால் இரு போகங்களுக்கும் சுமார் 60 கோடி ரூபா பணத்தினை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியுவதனால் சுமார் 270 கோடி ரூபா நஷ்டம் ஏற்படுகின்றதென இவ்விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

Wed, 05/13/2020 - 15:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை