வைத்தியர் ஒருவர் இன்மையால் அவதியுறும் கோணக்கலை பெருந்தோட்ட மக்கள்

பசறை கோணக்கலை பெருந்தோட்ட வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியர் ஒருவர் இல்லாத காரணத்தால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
 
கோணக்கலை, காவத்தை, பிலானிவத்தை, கோணக்கலை மேற்பிரிவு ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இந்த வைத்தியசாலையை நம்பியே உள்ளனர்.
 
கடந்தபல வருடங்களாக இத்தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த வைத்திய சாலையிலேயே தமது மருத்துவத் தேவைகளை பூர்த்திசெய்து வருகின்றனர். நகரங்களுக்கு மருந்துகளை எடுக்கச் சென்றால் அதிக பணம் தேவை என்பதால் எந்தவொரு நோய்க்கும் இந்த வைத்தியசாலையில்தான் இவர்கள் மருந்துகளை பெற்றுக்கொள்கின்றனர்.
 
ஆனால், கடந்த ஆறுமாதகாலமாக வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் இல்லாதமையால் நோயாளர்கள் தமது வைத்திய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கின்றனர்.
 
கர்ப்பிணித் தாய்மார்களின் மாதாந்த வைத்திய பரிசோதனை மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி சிகிச்சைகள் இங்கு இடம்பெற்றாலும் இவற்றை மேற்கொள்ள பசறை பிரதான வைத்தியசாலையில் இருந்துதான் வைத்தியர்கள் வருகைத்தர வேண்டிய நிலைக்காணப்படுகிறது. அவ்வாறு வருகைத்தருகின்ற வைத்திய அதிகாரிகள் உரிய நேரத்துக்கு வருகைத்தருவதும் இல்லை. இதனால் கர்ப்பிணித்தாய்மார்களும், குழந்தைகளும் நீண்ட நேரம் காத்திருந்துதான் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 
உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி இந்த வைத்தியசாலைக்கு ஒரு நிரந்தர வைத்தியரை நியமிக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதுடன், மலையக அரசியல் தலைமைகளும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டுமென கோணாக்கலை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
(மடுல்சீமை நிருபர்)
Thu, 05/21/2020 - 13:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை