மரக்கறி வகைகளின் விலைகள் குறைவு; நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பாதிப்பு

மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாகக் குறைவடைந்துள்ளதால் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். உற்பத்திக்காக செலவிட்ட பணத்தைக்கூட ஈடுசெய்ய முடியாதிருப்பதாக கவலை வெளியிடும் விவசாயிகள், இது விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

இலங்கையில் அதிகளவு மரக்கறி உற்பத்தி செய்யப்படுகின்ற மாவட்டங்களில் நுவரெலியா மாவட்டமும் ஒன்றாகும்.

அங்கு வாழும் பலர் விவசாயத்தையே முழுமையாக நம்பியுள்ளனர். பெருந்தோட்டத்துறையில் தொழில் செய்பவர்கள் கூட உப தொழிலாக விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், கொரோனா வைரஸ் பரவலையடுத்து மக்களை பாதுகாப்பதற்காக நாட்டில் தொடர் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் சந்தைகளுக்கு சென்று தமது விளைச்சலை விநியோகிக்க முடியாத நிலை நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டது.

தோட்டப்பகுதிகளுக்கு வருகைதந்த வியாபாரிகளும் குறைந்த விலைக்கே மரக்கறி வகைகளைக் கொள்வனவு செய்துள்ளனர். வைத்திருந்தால் அழுகிவிடும் என்ற அச்சத்தால் நட்டத்தைக்கூட பொருட்படுத்தாமல் விவசாயிகள் அவற்றை வழங்கியுள்ளனர்.  ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட சூழ்நிலையில் எதிர்பாராத அளவில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ நோக்கல், ராபு, தக்காளி ஆகியவற்றை 10 ரூபாவுக்குகூட விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கரட், கோவா, போஞ்சி ஆகியவற்றின் விலைகளும் குறைவடைந்துள்ளன. இதனால், விவசாயத்துக்காக செலவிட்ட தொகையைக்கூட மீள பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

உற்பத்திகளை நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர். அவ்வாறு இல்லாவிட்டால் விவசாயத்தையும் கைவிடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் எனத் தெரிவிக்கின்றனர்.

(ஹட்டன் சுழற்சி நிருபர்)

Thu, 05/14/2020 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை