தீ விபத்தால் சேதமடைந்த குடியிருப்புகளை திருத்தி குடியேற்ற நடவடிக்கை

தீ விபத்தால் சேதமடைந்த எபேட்சிலீ தோட்டக் குடியிருப்புகளை உடனடியாக திருத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹற்றன் எபோட்சிலீ தோட்டத்தில் 14 தொடர் குடியிருப்புகள் மின் ஒழுக்கு காரணமாக முற்றாக எரிந்து போயுள்ளன. இந்த வீடுகளில் இருந்த தோட்டத் தொழிலாளர்களின் பெறுமதி வாய்ந்த பொருட்களும் முற்றாக எரிந்து போயுள்ளன.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய உடனடியாக தோட்டத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸி உபத் தலைவர் கணபதி கனகராஜ் மற்றும் அந்த வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினர் லோகேஸ்வரி ஆகியோர் சென்று தொழிலாளர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர். பாதிக்கப்பட்ட குடியிருப்பைச் சேர்ந்த குடும்பங்கள் தோட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சனசமூக நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான உலர் உணவு பொருட்கள் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குடியிருப்புக்களை திருத்துவதற்கான கூரைத் தகடுகள் உள்ளிட்ட உபகரணங்களை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேற்கொண்டுள்ளார். தீயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு தேவையான ஆடைகள், போர்வைகள் உள்ளிட்ட பொருட்களை மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் நேரடியாகச் சென்று வழங்கிவைத்துள்ளார் .

மேலும் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கின்ற சிறுவர்களுக்குத் தேவையான உடைகள் மற்றும் உபகரணங்களையும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் வழங்கி வைத்துள்ளார். எதிர்வரும் ஒரு வார காலப்பகுதியில் குடியிருப்புகள் முற்றாக திருத்தி தொழிலாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tue, 05/05/2020 - 10:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை