பெருந்தோட்டத் துறையில் வருமானம் குறைந்த மக்களுக்கு புதிய வீடமைப்புத் திட்டம்

பெருந்தோட்டத் துறையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடமைப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கிணங்க 52 வீதமான நிதியை குறைந்த வட்டியுடன் சலுகைக் கடன் ரீதியாக அறவிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உரம் தொடர்பில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் பதினாறு விதமான விவசாய உரங்களுக்கு நிர்ணய விலையை தீர்மானிப்பது தொடர்பிலும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கான உரம் பகிர்ந்தளிப்பு மற்றும் பெருந்தோட்ட துறையில்  குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று  இடம் பெற்றுள்ளது.

அந்த செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் விவசாய சேவைகள் பணிப்பாளர் நாயகம் டபிள்யு டபிள்யு வீரக்கோன் கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் மத்துமபண்டார வீரசேகர, மீள்குடியேற்றம் சமூக அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பணிப்பாளர் வீ.பிரேமச்சந்திர, அமைச்சின் பணிப்பாளர் நாயகம் லால் பெரேரா உட்பட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் உர வகைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை மட்டுப்படுத்தல் அல்லது தடை செய்தல், விவசாயத்துறையில் பயிர்ச்செய்கை பாதிப்புற்ற விவசாயிகளுக்கு நட்ட ஈட்டை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலான காப்புறுதியை முறைப்படுத்தல், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு காணுதல், எதிர்காலத்தில் தட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு உரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர் இங்கு தெளிவு படுத்தியுள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 05/16/2020 - 07:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை