அவசியமானவர்கள் மட்டும் பற் சிகிச்சைகளை மேற்கொள்ளவும்

வடமாகாண பல் வைத்தியர் சங்கம்

கொவிட் தாக்கம் சமூகத்தில் பரவும் அபாயம் உள்ளதால் அவசியமானவர்கள் மட்டும் பற் சிகிச்சைகளை மேற்கொளுமாறு வடமாகாண பல் வைத்தியர் சங்கத்தின் தலைவர் ம.உதயகுமார் தெரிவித்தார்.

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் பல் வைத்தியசாலை ஒன்றில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு  குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,

பற் சிகிச்சைக்கு செல்லும் எமது மக்களின் பாதுகாப்பு கருதி சில வேண்டுகோள்களை விடுக்கின்றோம். தற்போது நாடு வழமைக்கு திரும்புவதாக கூறப்பட்டாலும் கொவிட் 19  சமூகத்தில் பரவும் அபாயம் குறைந்துவிடவில்லை.

இதனால் முக மறுசீரமைப்பு மற்றும் பல் சம்பந்தமான சிகிச்சைக்கு செல்பவர்கள் அவசியமானவர்கள் மட்டும் செல்லவும். ஏனெனில் வாயில் உள்ள எச்சில் ஊடாக கிருமி பரவக் கூடடிய ஆபத்து உள்ளது. பல்வீக்கம், விபத்து, பற்களில் ஏற்படும் காயத்திற்கு மாத்திரம் பற் சிகிச்சைக்கு செல்லவும். ஏனைய பற் சிகிச்சை நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு வந்ததும் செய்யவும்.

பற் சிகிச்சைக்கு செல்பவர்கள் அங்கு போக்குவரத்து செய்யும் போதும், பற் சிகிச்சை நிலையத்திலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும். பற்களை பற் சிகிச்சையின் போது கைகளால் தொட்டு காட்டுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதன் மூலம் மேலும் நோய் பரம்பல் அடையக் கூடிய ஆபத்து ஏற்படலாம்.

அத்துடன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக தகுதியற்ற பல பல் வைத்தியர்கள் இருக்கின்றார்கள். மக்கள் தவறுதலாக முன்னர் போனார்கள். தற்போது முன்னேற்றம் அடைந்த இந்த நேரத்திலும் மக்கள் சிலவேளை அங்கு செல்ல முடியும்.

சரியான பற் சிகிச்சை நிலையங்களின் இறுக்கமான நடைமுறைகளால் அங்கு செல்லக் கூடும். அங்கு இறுக்கமான நடைமுறைகள் இருக்காது.

எனவே மக்கள் அதனை தவிர்க்க வேண்டும். எமக்கு கிடைத்த அறிவுறுத்தலின் பிரகாரம் பற் சிகிச்சை நிலையங்கள் இயங்கும். இதனால் அவசியமானவர்கள் மாத்திரம் பற்சிகிச்சை நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற முடியும் என்றார்.

வவுனியா விசேட நிருபர்

Mon, 05/11/2020 - 12:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை