ஐரோப்பாவில் கட்டுப்பாடுகள் தளர்வு: வூஹானில் மீண்டும் வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் முடக்க நிலையை தளர்த்தி நாட்டை படிப்படியாக மீளத் திறக்கும் நீண்ட செயற்பாட்டை ஐரோப்பிய நாடுகள் நேற்று ஆரம்பித்தன. எனினும் இந்த வைரஸ் தொற்றின் ஆரம்பப் புள்ளியான சீனாவின் வூஹான் நகரில் பல வாரங்களின் பின் முதல் முறை மீண்டும் வைரஸ் தொற்று பதிவாகி இருப்பது அதன் இரண்டாவது அலைத் தாக்கம் பற்றிய அச்சத்தை அதிகரித்துள்ளது.

கொவிட்-19 தொற்றினால் உலகெங்கும் 280,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த நிலையில் ஒரு சிக்கலான சூழலுக்கு மத்தியில் பொருளாதார செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட ஆரம்பித்துள்ளன.

பிரிட்டன் வழக்க நிலைக்கு திரும்பும் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கும் அதேவேளை பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்த ஆரம்பித்துள்ளன.

எனினும் இந்த வைரஸ் தொற்றின் பிறந்தகமான சீன நகரில் ஒரு மாத காலமாக புதிய தொற்று சம்பவங்கள் பதிவாகாத நிலையில் நேற்று இரண்டாவது நாளாகவும் புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

அண்டை நாடான தென் கொரியாவிலும் ஒரு மாதத்திற்கு மேலான காலத்தில் அதிக எண்ணிக்கையிலான வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு தலைநகர் சோலின் இரவுநேர களியாட்டங்களுக்கு பிரபலமான பகுதி ஒன்றே புதிய வைரஸ் தொற்றின் மையமாக மாறியுள்ளது.

மில்லியன் கணக்கானவர்கள் பணிக்கு திரும்பாத நிலையில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் முடக்க நிலையை தளர்த்துவதற்கு அரசுகள் முயன்று வருகின்றன. எனினும் இந்த வைரஸ் மேலும் தீவிரம் அடையும் அச்சம் காரணமாக படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தும் முயற்சிகள் உலகெங்கும் இடம்பெற்று வருகின்றன.

நாட்டின் முடக்க நிலையை விலக்குவதற்கு இன்னும் காலம் தேவையாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எதிர்வரும் மாதங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டம் ஒன்றை வெளியிட எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.  

இந்தக் கட்டுப்பாடுகள் எமது வாழ்வு முறையில் இழப்பை ஏற்படுத்தியபோதும் விரைவாக நாட்டை முன்னோக்கி நகர்த்துவது முட்டாள்தனமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 நோய்ப் பரவலுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து பாடசாலைகளையும், கடைகளையும் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜோன்சன் நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டும் வெளிப்புற உடற்பயிற்சிகள் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படும் என்றார்.

பிரிட்டனில் தேசிய அளவில் வீட்டில் இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஏழு வாரங்கள் எட்டப்பட்டிருக்கும் நிலையில் அந்நாட்டில் வைரஸ் தொற்றினால் 31,800க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இது அமெரிக்காவுக்கு மாத்திரமே இரண்டாவதாகும்.

எனினும் ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளில் உயிரிழப்பு வீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரான்ஸில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஞாயிறன்று 70 ஆக குறைந்திருந்தது. கடந்த ஏப்ரல் தொடக்கம் மிகக் குறைவான உயிரிழப்பு எண்ணிக்கையாக இது இருந்தது. ஸ்பெயினில் நாளாந்த உயிரிழப்பு எண்ணிக்கை 200க்கு குறைவாக வீழ்ச்சி கண்டுள்ளது.  

இந்நிலையில் கடந்த எட்டு வாரங்களில் முதல் முறையாக பிரான்ஸில் வீட்டை விட்டு வெளியேற நேற்றுத் தொடக்கம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆரம்பப் பாடசாலைக்கு திரும்ப ஆசிரியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதோடு சில கடைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட தங்கள் வட்டாரங்களுக்குள் மட்டும் நடமாட பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவர். பத்து பேருக்கு மேல் ஒரே இடத்தில் ஒன்றுகூடவும் அனுமதிக்கப்படும்.

பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அடிக்கடி இயங்கும். ஆனால், முகக் கவசத்தைத் தொடர்ந்து அணிவது கட்டாயம் என்று பிரான்ஸ் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

ஸ்பெயினின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் உற்றார் உறவினர்களைச் சந்திப்பதற்கு அனுமதிக்கப்படுவர். உணவகங்களும் வெளிப்புற சேவைகளை இனி வழங்க முடியும். எனினும், நோய்ப் பரவல் அதிகம் உள்ள தலைநகர் மெட்ரிட்டிலும், பார்சிலோனாவிலும் முடக்கநிலைத் தொடரும்.

அதேபோன்று உலக சுகாதார அமைப்பு உலகளாவிய தொற்றை பிரகடனம் செய்து இரண்டு மாதங்களின் பின் பெல்ஜியம் மற்றும் கிரேக்கம் ஆகிய ஐரோப்பிய நாடுகளும் நேற்று முடக்க நிலையை தளர்த்தின.

உலகெங்கும் உள்ள அரசுகள் இந்த வைரஸ் தொற்றில் இருந்து மீட்சி பெறுவதற்கான போக்கை மேற்கொண்டு வருகின்றன. இந்த வைரஸினால் முதலில் பாதிப்பை சந்தித்த பல ஆசிய நாடுகளும் இரண்டாம் அலைத் தாக்கம் பற்றிய அச்சத்திற்கு மத்தியிலேயே வழமை நிலைக்கு திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் பெரும் பகுதிகள் வழமை நிலைக்கு திரும்பி வருவதோடு சங்காயில் இருக்கும் டிஸ்னிலாண்ட் கேளிக்கை பூங்கா மூன்று மாதங்களின் பின் நேற்று திறக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் மேம்படுத்தப்பட்ட சுகாதார, பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்.

எனினும் சீனாவின் உற்சாகத்தை குலைப்பது போன்று வூஹான் நகரில் கடந்த ஞாயிறன்று வைரஸ் தொற்று உள்ள ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார். இதனைத் தொடந்து நேற்று அந்த நகரில் மேலும் ஐந்து சம்பவங்கள் பதிவாகின.

இந்த அனைத்து சம்பவங்களும் ஒரே குடியிருப்பு வளாகத்தில் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களிடம் பதிவாகி இருப்பதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மறுபுறம் தென் கொரியாவில் நோய்ப் பரவலுக்கான புதிய தொடர்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்தத் தொற்றுக்குக் காரணமானவர் மே மாத அரும்பத்தில் சென்ற ஐந்து இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு இரவு விடுதிகள் மற்றும் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

29 வயதான அந்த நபருடன் தொடபுபட்ட ஆயிரக்கணக்கானவர்களை கண்டுபிடிப்பதில் தென் கொரிய நிர்வாகம் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டு 85 நோய் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் ஆசிய பிராந்தியம் எங்கும் அவதானத்துடன் முடக்க நிலை தளர்த்தப்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய ரயில் போக்குவரத்து வலையமைப்பான இந்திய ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.  

நாள்தோறும் 20 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் அழைத்துச் செல்லும் இந்தியாவின் பரந்த ரயில் வலையமைப்பு கடந்த மார்ச் பிற்பகுதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மில்லியன் கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தமது வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

வைரஸுக்கு எதிராக வெற்றி கண்ட ஹொங்கொங்கில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அரச எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றதோடு கலகம் அடக்கும் பொலிஸார் அவர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று வெள்ளை மாளிகை வட்டாரத்திற்குள் பரவியுள்ளது. அந்நாட்டு துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் பேச்சாளருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் உதவியாளர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது.

இதனால் வெள்ளை மாளிகை கொரோனா தடுப்பு பணிக்குழுவின் 3 உறுப்பினர்கள், தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் டொக்டர் அந்தோணி பவுச்சி, டொக்டர் ரொபர்ட் ரெட்பீல்ட், ஸ்டீபன் ஹான் ஆகியோர் ஆவார்கள். இவர்கள் பெயர் வெளியிடப்படாத கொரோனா தொற்று கொண்ட ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

இவர்களில் அந்தோணி பவுச்சி அமெரிக்காவில் கொரோனா வைர ஸுக்கு எதிரான போரில் முக்கிய பணியாற்றி வருபவர் ஆவார். 79 வயதான இவர் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் முடக்க நிலைக்கு எதிராக அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த லொக்டௌன் நடவடிக்கை தமது உரிமைகளை மீறுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் அதிகபட்சமாக 1.3 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு 80 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மறுபுறம் அவுஸ்திரேலிய மாநிலங்கள் சிலவற்றில் மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். கொவிட்-19 நோய்ப் பரவலை முன்னிட்டு மாணவர்களுக்கு மார்ச் மாதத்திலிருந்து விடுமுறை வழங்கப்பட்டது. நியூ சவுத் வேல்ஸ், குவின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் உள்ள மாணவர்கள் பாடசாலைக்குத் திரும்பியுள்ளனர். தற்போதைக்கு, இறுதி ஆண்டு மாணவர்கள், வாரத்திற்குக் குறைந்தது மூன்று முறை வகுப்புகளுக்குச் செல்வர். இருப்பினும், இம்மாத இறுதிக்குள் வகுப்புகள் அனைத்தையும் முழுவீச்சில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tue, 05/12/2020 - 14:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை