நிவாரணம் வழங்குவதில் குறைபாடு

5000 ரூபா நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தில் பல்வேறு சிக்கல்களும், பாகுபாடுகளும் காணப்படுவதாக பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“கொவிட் 19 நிவாரண உதவியாக 5000 ரூபா வழங்கும் வேலைத்திட்டத்தில் கிராமசேவை பிரிவிற்குப் பிரிவு வித்தியாசப்படும் நிலையினையே காணமுடிகின்றது.

ஆனால், சில கிராமசேவையாளர்களினதும், சமுர்தி உத்தியோகத்தர்களினதும் பங்கு மகத்தானதாக இருக்கின்றது. இப்பொறுப்பு மிக்க சேவைகளை அவர்கள் பொறுப்புடனும் மனிதநேயம் மற்றும் மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பிடக்கூடிய கிராம சேவையாளர்களும் சமுர்தி உத்தியோகத்தர்களும் திறம்படவும் சிறப்பாகவும் சேவையாற்றி வரும் வேளையில் பலர் பாகுபாடுகள், பாரபட்சங்களுடன் செயல்பட்டு வருகின்றதையும் அவதானிக்க முடிகின்றது. அது குறித்த முறைப்பாடுகளும் வந்த வண்ணமுள்ளன.

பொறுப்புக்களை தட்டிக்கழிக்கும் சம்பவங்களும் இடம்பெற்ற வண்ணமுள்ளன.

மேற்படி நிவாரண உதவிகளைக் கோருபவர்கள் கிராமசேவகரிடம் செல்லும் பட்சத்தில் சமுர்தி உத்தியோகத்தரிடம் செல்லுமாறும் கூறப்படுகின்றது. அங்கு சென்றால் உதவி கோருபவர்களின் பெயர்ப்பட்டியல் கிராம சேவையாளர்களிடமே உள்ளது.

அவரின் சிபார்சின் பேரிலேயே வழங்க முடியுமென்று சமுர்தி உத்தியோகத்தர்கள் கூறும் நிலையினால் மக்கள் வெகுவாக அலைக்கழிக்கப்படுகின்றனர். இவ்வாறு மக்கள் அலைக்கழிக்கப்படுவதால் சமூக இடைவெளியின்றி கொரோனா நோய் தொற்றுக்களும் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.

அத்துடன், அரசியல் ரீதியான செயல்பாடுகளும், காய் நகர்த்தங்களும் ஐயாயிரம் ரூபா நிவாரண உதவி வேலைத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிவாரண நிதி உதவிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாகவே கொண்டு சென்று கொடுக்கப்படல் வேண்டும்.

அதைவிடுத்து நிவாரண உதவிகள் பெறுவோரை அலுவலகங்களுக்கு வந்து நிவாரண நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கோரப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு ஐயாயிரம் ரூபாவைப் பெறுவதற்கு இரண்டாயிரம் ரூபா மட்டில் வாகனம் மற்றும் இதர செலவுகளுக்கு செய்ய வேண்டியுள்ளது. இது போன்ற நிலை பரவலாகவே காணப்படுகின்றன.

முதலாம் கட்ட ஐயாயிரம் ரூபா நிதி உதவிகள் வழங்கும் வேலைத்திட்டமே முடிவுறாமல் இருக்கும்போது இரண்டாம் கட்ட ஐயாயிரம் ரூபா நிதி உதவிகள் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது. இச் செயலானது பாரிய எதிர் விளைவுகளையே ஏற்படுத்தப் போகின்றது என்றார்.

பதுளை விசேட நிருபர்

Thu, 05/07/2020 - 12:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை