பொதுநலவாய நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கு அமைச்சர் பவித்ரா விளக்கம்

கொரோனாவால் ஆசிய நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆசிய நாடுகள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள சவால்கள் தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெளிவுபடுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான பொதுநலவாய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மாநாடு நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற்றுள்ளது.

 இந்த மாநாடு வீடியோ தொழில்நுட்பம் மூலம் நடத்தப்பட்டதுடன் இம்முறை மேற்படி மாநாட்டில் ஆசிய பிராந்தியம் சார்பாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இதன்போது கொரோனா  வைரஸ் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் செயற்பட்டுவரும் விதம் தொடர்பிலும் மேற்படி வைரஸ் காரணமாக ஆசிய பிராந்திய நாடுகள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள சவால்கள் தொடர்பிலும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

உலகளவில் நிலவும் பாதுகாப்பு நிலைமை ஆசிய பிராந்தியத்திலும் நிலவுவதாகவும் அதனை எதிர்காலத்திலும் முன்னெடுத்து செல்ல வேண்டியதன் அவசியத்தையும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய 54 நாடுகள் பங்கேற்ற மேற்படி மாநாட்டில் அனைத்து நாடுகளும் கொரோனா ஒழிப்பு தொடர்பில் பங்களிப்பு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் கெப்ரெயேசுஸ் மேற்படி மாநாட்டில் இணைந்து கொண்டுள்ளதுடன் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் இத்தருணத்தில் பொதுநலவாய நாடுகள் இந்த சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது பாராட்டத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். மேற்படி நாடுகள் ஒன்றிணைந்து தமது அனுபவங்களை பரிமாறிக்கொள்வது  கொரோனா வைரஸ் சூழ்நிலைக்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கு உறுதுணையாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் தொழில்நுட்ப ரீதியான விடயங்கள் பொதுநலவாய அமைப்பின் சுகாதாரம் தொடர்பான நிபுணர்கள் குழுவின் தலைவரால் சமர்பிக்கப்பட்டது. இம்முறை அந்த குழுவின் தலைவராக இலங்கை சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் தொடர்பான மேலதிக செயலாளர் டொக்டர் லக்ஷ்மி சேமதுங்க பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 05/16/2020 - 07:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை