அவசர அவசரமாக நுவரெலியாவில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் எதற்கு?

அவசர அவசரமாக நுவரெலியாவில் தனிமைப்படுத்தும் நிலையங்கள் திறக்கப்பட்டமை மக்கள் மத்தியில் அச்சத்தையும் அல்லது தடுமாற்றத்தையும் ஏற்படுத்திவிடக்கூடாது என சட்டத்தரணியும், மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

அனுஷா சந்திரசேகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்படவில்லை. கொழும்பில் இருந்து இடம்பெயர்ந்து வருபவர்களும் தனிமைப்படுத்தல்களுக்கோ அல்லது சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுதான்  இங்கு அனுப்பப்படுகிறார்கள்.

ஏற்கனவே 7000 பேர் இங்கு தப்பி வந்துள்ளார்கள் என்ற கூற்றும் வதந்தியே என்று பாதுகாப்பு தரப்பிலும் கூறப்பட்டுள்ளது. மஸ்கெலியா வைத்தியசாலை உட்பட மேலும் மூன்று இடங்களில் தனிமைப்படுத்தும் நிலையங்கள் திறக்கப்படவேண்டியதன் அவசியம் என்ன என்பது மக்கள் மத்தியில் எழும் அச்சம் நியாயமானதே.

மத்திய மாகாணத்தில் கண்டி,  மாத்தளை மாவட்டத்திலோ அல்லது நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை, வலப்பனை, ஹங்குராங்கெத்த தொகுதிகளிலோ அல்லாமல்  நுவரெலியாவில் மாத்திரம் ஏன் இப்படி மூன்று நிலையங்கள் திறக்கப்படவேண்டும் என்பதற்கு சம்மந்தப்பட்டவர்கள் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கமளிக்க வேண்டும்.

எமது மக்கள் ஏற்கனவே 5000 ரூபா நிவாரணம், 1000 ரூபா சம்பள உயர்வு இல்லாது கொரோனாவால் வேலைவாய்ப்பை இழந்து  பல்வேறு மன இறுக்கத்தில்  வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படியான செயற்பாடுகள் இவர்களுக்கு மேலும் மன அழுத்தங்களை உருவாக்கி விடக்கூடாது. ஆகவே, இந்த நிலையங்களில் வெளிமாவட்டத்தில் உள்ளவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளார்களா அல்லது பெருந்தோட்டத்துறையில் நோய் தொற்றுக்குள்ளானவர்கள் மாத்திரம் தான் இங்கு சிகிச்சை பெறுவார்களா என்பதனை  மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.

(பூண்டுலோயா நிருபர்)

Tue, 05/12/2020 - 12:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை