உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் செப்டம்பரில் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்கத்தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள் எதிர்வரும் செப்டம்பர் 02,03,04ஆம் திகதிகளில் விசாரணைக்கெடுக்க உச்ச நீதிமன்றம் நேற்று முடிவு செய்தது.  இந்த மனுக்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு முறையாக அழைப்பாணை வழங்கப்படவில்லையென அவர்கள் சார்பில் ஆஜரான  ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நீதிமன்றத்தில் அறிவித்தார். அதனால் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை கவனத்திற்கொண்ட உச்ச நீதிமன்றம், எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன் அவர்களுக்கு அழைப்பாணையை  கையளிக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடிப்படை உரிமைமீறல் மனுவின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  உட்பட பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனுக்கள் கடந்த ஜனவரி 20 ஆம் திகதி பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதிபதிகளான புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, எல்.டி.பி. தெஹிதெனிய, முர்து பெனாண்டோ, ப்ரீத்தி பத்மன் சுரசேனா ஆகிய 07 பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை   மே 12, 13, 14 ஆகிய தினங்களில் மேற்கொள்வதற்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

இந்த நிலையிலே அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நேற்று ஆராயப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிப்பதற்கு ஏழு நீதியரசர்கள் கொண்ட குழுவை பிரதம நீதியரசர் நியமித்திருந்தார்.

சட்ட மாஅதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் மேலும் பலர் ஏழு நீதியரசர்கள் கொண்ட குழு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட வேண்டுமென மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனைக் கருத்தில் கொண்டே பிரதம நீதியரசர் தனது பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

Wed, 05/13/2020 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை