இன்னொரு மீரியபெத்தையாக மாறுவதற்குள் காப்பாற்றுங்கள்

ஓல்ட்ரிம் மக்கள் கோரிக்கை

 

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை ஓல்ட்ரீம் தோட்டத்தில் காணப்படும் தனி வீட்டுத் திட்டத்தில் மண்சரிவு அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக இங்கு வசிக்கும் மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஐந்து வருடகாலமாக மண்சரிவு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே இங்கு வாழ்ந்துவருவதாகவும் இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தனிவீட்டுத் திட்டத்தில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 140 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

வீடுகளில் பல இடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. சில வீடுகளில் மண்திட்டுகள் சரிந்து வீழ்ந்துள்ளதால் வீடுகள் சேதமடைந்துள்ளன.  அபாயம் காரணமாக மூன்று குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளன.

கடந்த 20 வருடங்களுக்கு முன் அமரர் சந்திரசேகரன் காலத்தில் இந்த வீட்டு திட்டம்  உருவாக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை ஏற்படும் சந்தர்ப்பங்களில் இங்கு மண்சரிவு அபாயம் ஏற்படுகிறது.

140 பேரை இப்பகுதியிலிருந்து வெளியிருமாறு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் ஐந்து ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இவர்களுக்கு எவ்வித ஒழுங்குகளும் செய்துகொடுக்கவில்லை. மழை பெய்யும் போது எங்காவது இடம்பெயர்வதும் மீண்டும் மழை குறையும் போது வீடுகளுக்கு வருவதுமாக இவர்களின் வாழ்க்கை தொடர்கிறது.

தற்போது வீடுகளில் பாரிய அளவில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மற்றுமொரு மீறிய பெத்தை உருவாகுவதற்கு முன் தங்களை காப்பாற்றுமாறு இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எப்போது வேண்டுமானாலும் இங்கு மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால் இவர்களது நிலைமை குறித்து மலையக அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டுமென இந்த மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

(ஹற்றன் விசேட நிருபர்)

Tue, 05/26/2020 - 10:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை