அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை ஊரடங்கில் மாத்திரம் அமுல்

அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை ஊரடங்கில் மாத்திரம் அமுல்-NIC Last Digit Applicable Only Curfew Areas

அண்மையில் அறிவிக்கப்பட்ட, அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்லும் முறையானது, ஊரடங்கின் போது மாத்திரமே என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, இம்முறையானது ஊரடங்கின் போது என அறிவிக்கப்பட்டதோடு, பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படும்போது என மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது, மீண்டும் ஊரடங்கின்போது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதற்காக, அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்க முறையானது, ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்படுகின்றது.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்போது வீடுகளை விட்டு வெளியேறும் மக்களுக்கு இது பொருந்தாது.

ஏதேனும் ஒரு பகுதி அல்லது கிராமம் ஆபத்தான வலயமாக அறிவிக்கப்பட்டால், அத்தகைய பகுதிகளுக்குள் நுழையவோ வெளியேறவோ யாருக்கும் அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு,

திங்கட்கிழமை:- அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 1 அல்லது 2 என்ற இலக்கத்தை கொண்டவர்கள்
செவ்வாய்க்கிழமை:- அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 3 அல்லது 4 என்ற இலக்கத்தை கொண்டவர்கள்
புதன்கிழமை:- அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 5 அல்லது 6 என்ற இலக்கத்தை கொண்டவர்கள்
வியாழக்கிழமை:- அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 7 அல்லது 8 என்ற இலக்கத்தை கொண்டவர்கள்
வெள்ளிக்கிழமை:- அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 9 அல்லது 0 என்ற இலக்கத்தை கொண்டவர்கள்

வெளியில் செல்லும்போது, கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sun, 05/03/2020 - 21:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை