சீனாவின் அங்கமாக இருப்பதை தாய்வான் ஜனாதிபதி நிராகரிப்பு

சீனா வழங்கும் சுயாட்சி அதிகாரத்தை ஏற்று அந்நாட்டின் ஓர் அங்கமாக இருப்பதை தாய்வான் ஏற்காது என்று அந்நாட்டு ஜனாதிபதி ட்சாய் இங்-வென் நேற்று உறுதியாக அறிவித்துள்ளார். தாய்வான் மீதான சீனாவின் இறைமையை வலுவாக நிராகரித்திருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

தாய்வானை ஒன்றிணைப்பது தவிர்க்க முடியாதது என்றும் தாய்வானின் சுதந்திரத்தை பொறுத்துக்கொள்ளப் போவதில்லை என்றும் சீனா இதற்கு பதிலளித்துள்ளது.

தாய்வான் ஜனாதிபதியாக தனது இரண்டாவது தவணைக்காக பதவி ஏற்ற பின்னரே ட்சாய் இதனை அறிவித்தார். சீனா மற்றும் தாய்வானுக்கு இடையிலான உறவுகள் வரலாற்றுத் திருப்பு முனையை எட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“விரோதம் மற்றும் வேறுபாடுகளை தவிர்த்து நீண்ட காலத்திற்கு இணங்கி வாழ்வதற்கான வழியை இரு தரப்பும் கண்டறிவது அவசியமாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் ட்சாய் மற்றும் அவரது ஜனநாயக முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றது. தாய்வானை தனது நாட்டின் ஒரு பகுதியாக கருதும் சீனா அதனை மீட்பதற்கு தேவைப்பட்டால் இராணுவத்தை பயன்படுத்துவதாகவும் எச்சரித்து வருகிறது.

Thu, 05/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை