வாவியோரம் குப்பை கொட்டுவதை தடுக்குமாறு ஏறாவூரில் மக்கள் ஆர்ப்பாட்டம்

ஏறாவூர்ப் பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாவியோரம் கொட்டப்படுவதை நிறுத்துமாறு கோரி  5 ஆம் குறிச்சி பொது மக்கள்   நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாவியோரம் குப்பைகள் கொட்டப்படுவதனால் வாவி நீர் மாசுபடுவதுடன் அருகிலுள்ள கிராம மக்கள் துர்நாற்றத்தினால் சுகாதார சீர்கேட்டுக்குள்ளாவதாக  தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர்- 5 ஆம் குறிச்சிப்பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்வதுடன் பாடசாலை , ஆலயங்கள் என்பனவும் அமைந்துள்ளன.

குப்பை திடலிலிருந்து வரும் துர்நாற்றத்தினால் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குப்பைத்திடலிலில் கொட்டப்படும் ஆடு, மாடு மற்றும் கோழி போன்ற பிராணிகளின் கழிவுகளை காகங்கள் தூக்கிவந்து   குடிநீர்க்கிணறு மற்றும் குடியிருப்பு வளாகத்திலும் போடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அங்கு வருகைதந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் பொதுமக்கள் சார்பில் கருத்துத் தெரிவித்தார்.

இவ்வார்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்த  நகர சபை முதல்வர் ஐ. அப்துல் வாசித் கருத்துத் தெரிவிக்கையில், இக்குப்பைகளை குழியில் இட்டு துர்நாற்றம் பரவாமல் இரசாயன திரவம் ஊற்றி  மூடிவிட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அவர் வழங்கிய வாக்குறுதியையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

ஏறாவூர் நிருபர்

Wed, 05/20/2020 - 12:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை