கொரோனா தொற்றிய முதலாவது கடற்படை வீரர் குணமடைவு

இதுவரை 21 கடற்படை உறுப்பினர்கள் குணமடைவு

கொரோனா  வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கடற்படை வீரரான பொலன்னறுவைச் சேர்ந்தவர் உட்பட மேலும் 05 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட முதலாவது கடற்படை வீரர் உள்ளிட்ட, இக்கடற்படை வீரர்கள் 05 பேரும் வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றியவர்கள். வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதலாவது கடற்படை வீரர் விடுமுறையில் இருந்தபோது, காய்ச்சல் காரணமாக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் அவர் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக அவர் வெலிக்கந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

ஏனைய கடற்படை வீரர்கள் 04 பேருக்கும் கொவிட் -19 தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக ஹோமாகம மற்றும்  IDH வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் அவர்களது உடம்பில் இல்லை என்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் நேற்றையதினமும் (08) இன்றையதினமும் (09) வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இதற்கமைய, இக்கடற்படை வீரர்கள் 05 பேர் உட்பட, வைரஸினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 21 பேர் இதுவரையில் குணமடைந்து  வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், அவர்கள் அனைவரும் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Sat, 05/09/2020 - 16:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை