Header Ads

மலையகத்தை புரட்டிப்போட்ட வெள்ளம் நூற்றுக்கணக்கானவர்கள் இடம்பெயர்வு

மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்படைந்துள்ளது. ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் நூற்றுக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் மலையகத்தில் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் குடியிருப்புகளும் ஆலயங்களும் நீரில் மூழ்கியுள்ளன. 

பிரதான பாதைகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகள் காரணமாக அவ்வீதிகளின் ஊடான போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் பெய்த கடும் மழையால் நாவலப்பிட்டி நகரம் நீரில் மூழ்கியுள்ளது. இங்குள்ள சில வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன், பாரிய இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பிரதேசத்திலும்,  ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியிலும்,   ஹட்டன் - தலவாக்கலை பிரதான  வீதியின் வூட்டன் பகுதியிலும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.   இதன் காரணமாக மலையகத்தின் பல பகுதிகளுக்கான   போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டுமென போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

பொகவந்தலாவ,  கொட்டியாகலை கிழ்பிரிவுத் தோட்டத்திலும் ஏற்பட்ட வெள்ளத்தால்  லயன் குடியிருப்பொன்று பகுதியளவில் நீரில் மூழ்கியுள்ளது.   குறித்த லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்றில் ஏற்பட்ட  வெள்ளத்தால் 14 வீடுகளைக் கொண்ட குடியிருப்புத் தொகுதியைச்  சேர்ந்த   35 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை  தங்கவைப்பதற்கான நடவடிக்கையினை தோட்ட நிர்வாகம் எடுத்துள்ளதுடன் சாமிமலை ஒல்டன் கீழ் பிரிவில் ஆற்றடி பிள்ளையார் ஆலயம் அதனை சூழ உள்ள குடியிருப்புகளும் நீரில் மூழ்கியுள்ளன.

காசல்ரீ நீர்த்தேக்கத்துடன் இணையும் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்தமையால் பொகவந்தலாவ லெச்சுமித் தோட்ட பிரதான பாதையில்  போக்குவரத்து பாதிப்படைந்ததுடன் போடைஸ் ஆறு பெருக்கெடுத்தமையால்  ஆற்றின் கரையோர குடியிருப்புகளும் வெள்ளம் புகுந்தமையால் குடியிருப்பாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

மஸ்கெலியா மவுசாகலை, காசல்ரீ, நோட்டன் விமலசுரேந்திர நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைவதனால் கரையோர பகுதியிலுள்ளவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் மின்சாரசபை அதிகாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சாமிமலை, கவரவில தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவுப் பாடசாலை கட்டடத் தொகுதி மற்றும் அதன் அருகில் உள்ள குடியிருப்புகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் குறித்த பகுதி பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.  டீசைட் தோட்டத்தில் பெண் தொழிலாளியொருவர் மின்னல் தாக்கத்திற்குட்பட்ட நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் பிரதான வீதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவினை அகற்ற வீதி போக்குவரத்து அதிகார சபை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேவேளை,  அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் டிக்கோயா, தரவளை மேல்பிரிவுத் தோட்டத்தில் 11 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் 61 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஹட்டன் - டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பகுதியில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் சில மணி நேரம் ஒருவழி போக்குவரத்தே நேற்று இடம்பெற்றது. வீதியை உடனடியாக சீர்செய்யும் நடவடிக்கைகளில் கொட்டகலை பிரதேச சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் ஜெசிபி இயந்திரத்தை கொண்டுமேற்கொண்டு வருகின்றனர்.

கொட்டகலை பொரஸ்ரிக் ஆறு பெருக்கெடுத்தமையால் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலை விடுதிகள் வெள்ள நீரினால் மூழ்கின. அதனை அண்டிய சில பகுதிகளும் வெள்ள நீரினால் மூழ்கின. மேல்கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கொத்மலை ஓயா பெருக்கெடுத்துள்ளதுடன் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் அதன் மூன்று வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. அத்துடன் சென்கிளையார், டெவன் நீர்வீழ்ச்சியின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

(நோட்டன் பிரிட்ஜ், ஹட்டன் விசேட, ஹட்டன் சுழற்சி, தலவாக்கலை குறூப் நிருபர்கள்)

Wed, 05/20/2020 - 15:13


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.