ஹொங்கொங்கிற்கான சலுகையை முற்றிலும் நீக்க அமெரிக்கா திட்டம்

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது ஹொங்கொங் எவ்வாறு சிறப்பாக நடத்தப்பட்டதோ அதுபோன்று இனி நடத்தப்படமாட்டாது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ கூறியுள்ளார்.

ஹொங்கொங்கில் புதிய பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை சீனா அறிவித்துள்ளதைத் தொடர்ந்து பொம்பியோ அமெரிக்க பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீனா முன்மொழிந்துள்ள பாதுகாப்புச் சட்டம் இந்த வட்டாரத்தில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹொங்கொங்குக்குத் தற்போது வழங்கப்படும் பொருளாதார சிறப்புச் சலுகைகள் சிலவற்றையோ, மொத்தமாகவோ நிறுத்தி வைப்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவெடுப்பார்.

அமெரிக்க சட்டத்தின் கீழ் ஹொங்கொங் ஒரு சர்வதேச நிதி மற்றும் வர்த்தக மையமாக தற்போது வரை சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அந்த பிரதேசம் பிரிட்டிஷ் காலணியாக இருக்கும்போதே இந்த சாதகமான வர்த்தக அந்தஸ்து வழங்கப்பட்டது.  

எனினும் அமெரிக்காவின் சலுகைகளைத் தொடர்ந்து பெற, தனக்குப் போதிய தன்னாட்சி உரிமை இருப்பதை ஹொங்கொங் நிரூபிக்க வேண்டும் என்று அமெரிக்க பாராளுமன்றம் கடந்த ஆண்டு சட்டம் நிறைவேற்றியது.

இந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டால்  ஹொங்கொங் சீனாவின் பெருநிலப் பகுதியாக கருத்தில் கொண்டே அமெரிக்கா செயற்படும்.

Fri, 05/29/2020 - 10:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை