வௌவால்களை ஆராயும் சீனப் பெண்ணை​ விசாரிக்க அமெரிக்கா வலியுறுத்தல்

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் தோற்றம் குறித்த கேள்விகளுக்கும்  சந்தேகங்களுக்கும் இன்னும் பதில் கிடைக்கவில்லை. 'வௌவால்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம்' என்றும் 'எறும்பு திண்ணிகளிடம் இருந்து மனிதருக்கு பரவி இருக்கலாம்' என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால்  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் 'சீனாவில் வூஹான் நகரில் உள்ள  வைராலஜி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சீன ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டது தான் கொரோனா. அது அங்கிருந்து கசிந்து இருக்கலாம்' என  சீனா மீது குற்றம்சாட்டி வருகின்றன

இந்நிலையில்  வூஹான் வைரலாஜி ஆராய்ச்சி மையத்தின்  மூத்த பெண் ஆராய்ச்சியாளரும்  'பேட் வுமன்' (வௌவால் பெண்மணி) என அழைக்கப்படுபவருமான  ஷி ஷெங்கிலி மீது  உலகின் கவனம் திரும்பி உள்ளது. 18 வருடங்களாக கொரோனா குடும்ப வைரஸ் குறித்தும் வவ்வால்கள் குறித்தும் இவர் ஆராய்ச்சி செய்து வருகிறார். உடல் முழுவதும் வைரஸ் கிருமிகள் இருந்தும் வவ்வால் மட்டும் எப்படி பாதிக்காமல் இருக்கின்றன என்பது குறித்து அறிய  இந்தியா  அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று  அங்குள்ள மலை குகைகளில் உள்ள வவ்வால்களை பிடித்து வந்து  சீனாவில் ஆராய்ச்சிகளை செய்து இருக்கிறார்.

கொரோனா வைரஸ் கசிந்ததாக அமெரிக்கா கூறும்  வூஹான் ஆராய்ச்சி மையத்தின் 'பி4' சோதனை கூடத்தில்தான் ஷி ஷெங்கிலி இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இவர்  2013ல் வௌவால் ஒன்றின் உடலில் இருந்து ஒரு கொடிய வைரசைக் கண்டறிந்தார். இது கொரோனா வைரசோடு  96.2 ஒத்துப் போவதால் ​வௌவாலிடம் இருந்து தான்  கொரோனா பரவியிருக்கும் எனக் கூறி வருகிறார்.

“கொரோனா வைரஸ் வுகான் நகரில்  கடல்வாழ் உயிரினங்களை விற்கிற சந்தையில் இயற்கையாக உருவான வைரஸ் என்று சொல்லப்படுவதில் உண்மை இல்லை. இந்த வைரஸ் அந்த சந்தைக்கு பக்கத்தில் அமைந்துள்ள வுகான் வைராலஜி நிலையத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான்  அங்கிருந்து கசிந்துதான் அது உலகம் முழுவதும் இப்போது பரவி விட்டது” என்பதுதான் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் தொடர் குற்றச்சாட்டு.

அந்த வைராலஜி நிலையத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்தவர் இந்த வௌவால் பெண்தான்.

கடந்த டிசம்பர் மாதம் 1-ம் திகதி கொரோனா வைரஸ் வுகான் நகரில் முதன்முதலாக தென்பட்டதாக உலகத்துக்கு தெரிய வந்தபோதே  இந்த வௌவால் பெண் காணாமல் போய்விட்டார்.

அவரைப் பற்றி எழுந்துள்ள பரபரப்பு குற்றச்சாட்டு  அவர் கொரோனா வைரஸ் பற்றிய மர்ம தகவல்கள் மற்றும் இரகசியங்களுடன் மேற்கத்திய நாடு ஒன்றுக்கு தாவி விட்டார் என்பதுதான்.

இந்த குற்றச்சாட்டை  அந்த வௌவால் பெண் இப்போது மறுத்திருக்கிறார். இந்த மறுப்பு எப்படி வந்திருக்கிறது?

திடீரென காணாமல் போய்  மூளைச்சாவு அடைந்து விட்டார் என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டு  இப்போது பொதுவெளிக்கு வந்து  “இல்லை.. இல்லை.. நான் உயிரோடுதான் இருக்கிறேன்” என்று காட்டிக் கொண்டிருக்கிற வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் போல இவரும் வெளியுலகில் தோன்றி இருக்கிறாரா? என்றால்  அதுதான் இல்லை.

இப்போது ‘வீசாட்’ என்ற சமூக ஊடகத்தின் வழியேதான் அவர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் என்ன சொல்லி இருக்கிறார்?

“ நானும்  குடும்பமும் நன்றாகவே இருக்கிறோம் அன்பு நண்பர்களே...

நாட்டை விட்டு தாவிச்செல்வது என்பது எத்தனை கடினமானது... அது ஒரு போதும் நடக்காது.. நாங்கள் தவறாக எதையுமே செய்து விடவில்லை. அறிவியலின் மகத்தான நம்பிக்கையுடன் சொல்கிறேன். மேகங்கள் கலைந்து சூரியனைக் காணும் நாள் வரும். அப்போது சூரியன் பிரகாசிப்பதைக் காண்போம்”.

'ஷி ஷெங்கிலி தனது ஆய்வு மூலம் கொரோனா வைரசை உருவாக்கியிருக்கிறார். அந்த வைரஸ் சோதனை கூடத்தில் இருந்து கசிந்து இருக்கலாம். இதனால்  அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்' என  அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு ஆதரவான ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்க துவங்கியுள்ளனர். இதற்கு பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Tue, 05/05/2020 - 11:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை