சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சுகாதார முறைகளை பின்பற்றி மிக உணர்வெழுச்சியாக அனுஷ்டிக்கப்பட்டது. தமது உறவுகளை இழந்த உறவினர்கள் கதறியழுத சத்தம் கேட்டு நந்திக்கடலும் மௌனமாகி நின்று அஞ்சலி செலுத்தியது.

அஞ்சலி நிகழ்வானது நந்திக்கடல் கரையோரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மைதானத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. முதலில் அக வணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் தனது கணவன் மற்றும் பிள்ளையை இழந்த இலட்சுமணன் பரமேஸ்வரி என்ற தாயார் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலியை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனைய  உறவுகளுக்கான சுடர்கள்  ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவு பிரகடனம் வெளியிடப்பட்டது.

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சுகாதார நடைமுறைக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக கவசங்கள், கை கழுவி செல்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் சமூக இடைவெளிகளை பேணக்கூடியவாறு நாட்டப்பட்டிருந்த சுடர்கள் என சுகாதார விதிமுறைகளை மீறாத வகையில் நிகழ்வு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதாரப் பிரிவினர் நினைவேந்தல் இடம்பெறும் இடத்துக்கு  வருகை தந்து மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பார்வையிட்டு அவை உரிய முறையில் இருப்பதாக உறுதிப்படுத்தினர்.

சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர். மேலும் நினைவேந்தலுக்காக வருகைதந்த அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பரந்தன், -முல்லைத்தீவு வீதியில் பல இடங்களில் மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

அஞ்சலி நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சர்களான அனந்தி சசிதரன், கந்தையா சிவநேசன், மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், ஆண்டியையா புவனேஸ்வரன், முன்னாள் யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்  பிரபா கணேசன்  உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் நந்திக்கடலில்    மலர்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதேபோன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் விருட்சம் அமைப்பு, கருமாரி அம்மன் ஆலய பரிபாலனசபை மற்றும் அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆத்மா சாந்திப்பூஜை வழிபாடுகள் வவுனியா கருமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றன.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்  உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு விசேட, மாங்குளம் குறூப்,வவுனியா, வவுனியா விசேட, யாழ்.விசேட, பருத்தித்துறை விசேட, மன்னார் குறூப் நிருபர்கள்

Tue, 05/19/2020 - 11:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை