வைரஸுக்கு எதிராக உலகெங்கும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி சுகாதார அமைப்பு நம்பிக்கை

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர் எண்ணிக்கை தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் 900 க்கும் குறைவாகக் காணப்படும் நிலையில் வைரஸுக்கு எதிரான உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தை உலக சுகாதார அமைப்பு வரவேற்றுள்ளது. எனினும் இரண்டாம் அலை தாக்கம் குறித்து கடும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த உலகளாவிய தொற்றினால் வர்த்தகங்கள் ஸ்தம்பித்து வேலைவாய்ப்புகள் இழந்திருக்கும் சூழலில் அமெரிக்காவின் பிரதான விமானசேவை நெருக்கடிக்கு முகம்கொடுக்க வாய்ப்பு இருப்பதாக போயிங் தலைமை நிறைவேற்று அதிகாரி எச்சரித்திருப்பது மோசமான பொருளாதார நிலை பற்றிய அச்சத்தை அதிகரித்துள்ளது. 

கொவிட்-19 வைரஸினால் உலகெங்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 287,000 ஐ தாண்டியுள்ளது. நோய்த் தொற்றியவர்கள் எண்ணிக்கை 4.2 மில்லியனாக அதிகரித்துள்ளது.

பல வாரங்களாக இடம்பெறும் முடக்க நிலையுடன் நோய்த் தொற்று வீதம் பல நாடுகளிலும் குறைய ஆரம்பித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

“வைரஸ் தொற்றின் வேகத்தை குறைப்பதில் வெற்றி கண்டிருப்பது நல்ல செய்தியாகும் அது இறுதியில் உயிர்களை காத்துள்ளது” என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சில அரசுகள் வைரஸ் பரிசோதனை மற்றும் தடயங்களை கண்டுபிடிப்பதை தீவிரப்படுத்தாமல் குருட்டுத்தனமாக செயற்படும் நிலையில் நோய்ப் பரவலில் இரண்டாம் அலை ஒன்று பற்றியும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் சில நாடுகளில், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதை உலக சுகாதார அமைப்பின் நெருக்கடி நிலைத் திட்டப் பிரிவுத் தலைவர் டொக்டர் மைக் ரயன் சுட்டிக்காட்டினார்.

ஜெர்மனி, சீனாவின் வூஹான் நகர், தென் கொரியா போன்ற இடங்களில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. உலகில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்திய நாடான அமெரிக்காவில் இந்த வைரஸ் இன்னும் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில் எச்சரிக்கைகளை மீறி அண்மைய நாட்களில் அந்நாட்டில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

எனினும் கடந்த திங்கட்கிழமை முடிவின்போது 24 மணி நேரத்திற்குள் அமெரிக்காவில் 830 உயிரிழப்புகளே பதிவாகி இருந்தது ஒரு சாதகமான செய்தியாகப் பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவே அந்நாட்டில் 900க்கும் குறைவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் நோய்த் தொற்றினால் 81 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதனை விடவும் அதிகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நியூயோர்க்கில் உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விடவும் சுமார் 30 வீதம் உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது.  

வெள்ளை மாளிகையில் முகக் கவசம் கட்டாயம்

இந்நிலையில் கடந்த வார இறுதியில் வெள்ளை மாளிகையில் வைரஸ் பரவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  வெள்ளை மாளிகையில் இருக்கும் ஊழியர்கள் பணியின்போது முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் உதவியாளர் ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது உறுதியாகி இருக்கும் நிலையில் அவரை சந்திப்பதை மட்டுப்படுத்தி இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

“எமக்கு தொலைபேசி மூலம் உரையாட முடியும்” என்று பென்ஸிடம் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். “அவருக்கு நோய்த் தொற்று ஏற்படவில்லை என்பது சோதனையில் தெரிகிறது என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அவர் நிறையப் பேருடன் தொடர்புகொள்கிறார்” என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் தேர்தலுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் புத்துயிர் பெறச் செய்வதற்கு டிரம்ப் முயன்று வருகிறார். சோதனையை வேகப்படுத்துவதில் பெரும் முன்னேற்றம் கண்டிருப்பதோடு வைரஸ் தொற்றும் எண்ணிக்கையும் வேகமாக வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.  நாட்டை மீண்டும் திறப்பது அவசியமானதாக இருப்பதாகவும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். “எமது நாட்டை மீண்டும் திறப்பதையே மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்றார்.

அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் நீடிக்கும் நிலையில் உள்ளூர் கட்டுப்பாடுகளை மீற தமது தொழில்சாலையின் செயற்பாட்டை ஆரம்பிக்கவிருப்பதாக டெஸ்லா நிறுவனத் தலைவர் எலோன் மாஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

“உள்ளூர் விதிகளை மீறி டெஸ்லா உற்பத்திகள் இன்று (திங்கள்) ஆரம்பிக்கப்படும். நான் எல்லோருடனும் இருக்கிறேன். யாராவது கைதி செய்யப்படுவதாயின் அது நானாக இருக்க வேண்டும் என்று கேட்கிறேன்” என்று அவர் அறிவித்துள்ளார்.

முடக்க நிலையால் உலகெங்கும் மில்லியன் கணக்கானவர்கள் தொழிலை இழந்துள்ளனர். இதன் பொருளாதாரத் தாக்கம் படுமோசமாக இருக்கும் என்று தொழில் நிறுவனத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்தெழும் ஐரோப்பா

ஐரோப்பாவில் நோய்த் தொற்று வேகம் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சி கண்டு வருகிறது. முடக்க நிலையில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த எட்டு வாரங்களில் முதல் முறையாக பிரான்ஸ் மக்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாரிஸின் சம்ப்ஸ்-எலிஸ் பகுதி மீண்டும் உயிர்பெற ஆரம்பித்துள்ளது. மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பொறுமையுடன் காத்திருப்பதை பார்க்க முடிகிறது.

உலகில் மிகக் கடுமையான லொக்டௌன் செயற்பாட்டை கடைப்பிடித்து வந்த ஸ்பெயினில் மதங்களுக்குப் பின் மக்களுக்கு வெளிப்புற தளங்கள் மற்றும் உணவகங்களுக்கு செல்ல முடிந்துள்ளது. எனினும் வைரஸ் அதிகம் பரவி வரும் தலைநகர் மெட்ரிட் மற்றும் பார்சிலோனா தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது.

கிரேக்கத்தில் கடைத்தெருக்கள் மீண்டும் மக்கள் நெரிசல் கொண்ட பகுதியாக மாறியிருப்பதோடு நெதர்லாந்து தொடக்கம் சுவிட்சர்லாந்து மற்றும் குரோசியா வரை ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளில் பல வாரங்களின் பின் சிறுவர்கள் மீண்டும் பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.  ஆசிய பிராந்தியங்களிலும் வழமையான நிலை திரும்பி வருவதோடு இந்தியாவில் நேற்று ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.  சீனாவின் சங்காய் டிஸ்னிலாண்ட் கேளிக்கை பூங்கா மீண்டும் திறக்கப்பட்டிருப்பதோடு ஹொங்கொங்கில் பெரும்பாலான ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனர். சீனா மற்றும் தென் கொரியாவில் மீண்டும் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையிலேயே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

எனினும் சீனாவில் நேற்று புதிதாக நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை என்பதோடு தொடர்ச்சியாக 27 நாட்களில் அங்கு எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.

Wed, 05/13/2020 - 16:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை