பதுளை மாவட்டத்தில் மலர் செய்கையாளர்கள் பாதிப்பு

பதுளை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் மலர் தோட்டங்களை மேற்கொண்டுவந்த செய்கையாளர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் தமது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

பதுளை மாவட்டத்தில் பள்ளகெட்டுவை, எல்ல, பண்டாரவளை, தியத்தலாவை போன்ற இடங்களில் சுமார் 160 பேர் பரவலாக மலர் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். 800இற்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரமும் இதில் தங்கியுள்ளன.

மேற்படி இடங்களிலிருந்து மலர்கள், கொழும்பு கொச்சிக்கடை , வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளை போன்ற இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

ஆலய பூஜை வழிபாடுகள், சுவாமிகள் அலங்காரம், திருமண வைபவங்கள், விழாக்கள், உற்சவங்கள் ஆகியவற்றிற்கும், வீட்டுப் பூஜைக்கும் மலர்கள், மாலைகள், பூச்சரங்கள், பூங்கொத்துக்கள் என்ற வகையில் மலர்களுக்கான கேள்விகள் பெருமளவில் இருந்துவந்தன.

இதனை நம்பியே இவர்கள் தமது வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். மலர்களின் கேள்விகளுக்கமைய ஏக்கர் கணக்கான பூமியில் மலர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் தற்போது, கோவிட் 19 நோய்த்தொற்று பிரச்சினையால் நாடு முழுமையாக முடங்கியுள்ளது. பதுளையிலிருந்து மலர்களை கொழும்பு உட்பட ஏனைய இடங்களுக்கு அனுப்புவதற்கும் வாய்ப்பில்லை.

ஆலயங்கள் முழுமையாக மூடப்பட்டிருப்பதால் மலர் பாவணை பூரணமாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. விழாக்கள், உற்சவங்கள், வைபவங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இத்தகைய நிலையினால் மலர்ச்செய்கை முன்னெடுக்க முடியாத நிலைக்கு இந்த உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மலர்கள் குறிப்பிட்ட தினங்களில் பறிக்க வேண்டும். தவறின் அம்மலர்களினால் பயன் இல்லாது போய்விடும்.

இந்நிலை தொடரும் பட்சத்தில் மலர்ச்செய்கையாளர்கள், தத்தம் தொழிலை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டும். மலர்ச்செய்கையாளர்கள் தமது அன்றாட வாழ்வை கொண்டுசெல்வதில் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் உற்பத்தியாளர் என்.சிவகுமார் கருத்து வெளியிடுகையில்,

நான் எனது குடும்பத்துடன் நீண்ட காலமாக பெரியளவில், மலர் செய்கை தொழிலை மேற்கொண்டு வருகின்றேன். இதன் மூலம் எனக்கு பெரியளவிலேயே வருமானமும் கிடைத்து வந்தது. எமது வாழ்வியலை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வந்தோம். வருமானத்தின் மூலம் பலருக்கு உதவிகளை செய்யக்கூடிய நிலையும் எமக்கு இருந்தது.

ஆனால் தற்போது, எமக்கு எந்த வருமானமும் இல்லை. சேமித்து வைத்ததில், எமது வாழ்வியலை நடாத்தி வருகின்றோம். நாட்டில் இயல்பு நிலை விரைவில் ஏற்படுமேயானால் மீளவும் எமது தொழிலை மேற்கொள்ளலாம். அந்நன்னாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என்றார்.

பதுளை விசேட நிருபர்

Mon, 05/11/2020 - 12:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை