நெல்லை அரச சொத்தாக அரசு அறிவிக்க வேண்டும்

அகில இலங்கை கமத்தொழில் சம்மேளனம் அரசாங்கத்திற்கு யோசனை

அரிசியின் விலையை அரசாங்கமே நிர்ணயிக்க வேண்டும். அரசாங்கத்தின் சட்டம் மற்றும் நியதிகளை மீறி செயற்படும் அரிசி ஆலைகளை அரசாங்கம் சுவீகரிக்க வேண்டுமென அகில இலங்கை கமத்தொழில் சம்மேளனம் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

நெல்லை அரச சொத்தாக கருதி அதனை அத்தியாவசிய சேவைக்குள் உள்ளடக்கி அரசாங்கம் நிர்ணயிக்கும் விலை மற்றும் சட்ட திட்டங்களை பின்பற்றாத அரிசி ஆலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென்றும் அந்த சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.

அரசாங்கம் நெல்லுக்கு விதித்துள்ள நிர்ணய விலைக்குப் பொருத்தமானதாக அரிசிக்கான நிர்ணய விலையையும் தீர்மானிக்க வேண்டுமென்றும் அந்த சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதேவேளை மூடப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமானதும் ச.தொ.சவுக்கு சொந்தமானதுமான அரிசி ஆலைகளை உடனடியாக திறப்பதற்கும் அத்துடன் சிறு அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு கடன் மற்றும் நிவாரணங்களை வழங்கி அவர்களை பலப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வாறு செய்தால் பாரிய அரிசி ஆலைகளின் ஏகாதிபத்தியத்தை வீழ்ச்சியுறச் செய்யமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ள அந்த சம்மேளனம் அரிசி விற்பனையிலும் அரசாங்கம் தலையிடவேண்டும் என்றும் தெரிவிக்கின்றது.

நாட்டில் அரிசித் தட்டுப்பாடு கிடையாது எனினும் பாரிய அரிசி ஆலைகளின் உரிமையாளர்களாளே தட்டுப்பாடு நிலவுவதாக காட்ட முனைகின்றனர்.

நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு 24  இலட்சம் மெற்றிக் தொன் அரிசி தேவைப்படும் நிலையில்  ஒரு வருடத்தில் 50 லட்சம் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய மேற்படி சம்மேளனம் ஒரு கிலோ கீரி சம்பா மூலம் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சுமார் 50 ரூபாவை இலாபமாக பெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றது.

நெல் கொள்வனவின் போது நாட்டரிசியை விட குறைந்த விலையிலேயே கீரி சம்பா பெறப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளதோடு அவ்வாறானால் இந்தளவு விலை அதிகரிப்பை மேற்கொள்வது அரிசி மாபியாவின் ஒரு அம்சமே என்றும் அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.(ஸ)

லோரன்ஸ்செல்வநாயகம்

Tue, 05/26/2020 - 08:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை