முழுநேர கட்சிப் பணியாளர்களுக்கு நிவாரணமாக 9 இலட்சம் நிதி ஒதுக்கீடு

கொரோனா முடக்க காலத்தில் தொழிற்சங்க, அரசியல் கட்சி முழுநேரப் பணியாளர்கள் தமது மாதச்சம்பளத்தை முழுமையாகப் பெற முடியாத நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் தொழிலாளர் தேசிய முன்னணி கட்சி நிதியில் ஒன்பது இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கி உள்ளதாக அதன் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தொழிலாளர் தேசிய சங்கம் தமது சந்தாவை தற்காலிகமாக அறவிடாதிருக்க தீர்மானித்த அதேவேளை, கட்சி நடவடிக்கைகளையும் முழு அளவில் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் தொழிற்சங்கம் மற்றும் கட்சி நடவடிக்கைகளுக்காக முழுநேர உத்தியோகத்தர்களாக, இணைப்பாளர்களாக கடமையாற்றும் நூற்றுக்கணக்கான முழுநேர உத்தியோகத்தர்கள் தமது மாத வருமானத்தை முழுமையாக பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் தேசிய முன்னணி கட்சி நிதியத்தில் இருந்து ஒன்பது இலட்சம் ரூபா நிதியினை சங்கத்தினதும், கட்சியினதும் முழுநேர உத்தியோகத்தர்களுக்கு நிவாரணமாக வழங்கும் பொருட்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவி நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரன் ஊடாக வழங்கி வைத்ததாக தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.திலகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Sat, 05/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை