தினமும் 6000 பிசிஆர் பரிசோதனைகள் நடத்துவது தொடர்பில் ஆராய்வு

கொரோனா தடுப்பு செயலணி மீளாய்வுக் குழு தீர்மானம்

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதில் முன்னேற்றகரமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய விசேட செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.

மேற்படி செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட செயற்பாட்டு செயலணியின் மீளாய்வுக் குழு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தலைமையில் அமைச்சில் கூடியுள்ளது.

மேற்படி மீளாய்வுக் குழுவில்  சுகாதார சேவை நிர்வாகத்தினர், நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் விசேட மருத்துவர்கள் 35 பேர் அங்கம் வகிப்பதுடன் அந்தக் குழு இரண்டு தினங்களுக்கு ஒரு தடவை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தலைமையில் கூடி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இந்த அமர்வின் போது எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முன்னேற்றகரமாக மேற்கொள்வதற்கு தினமும் 6000 பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வது தொடர்பில் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு அமைச்சருக்கு தெளிவுபடுத்தியது.

தற்போது பிசிஆர் பரிசோதனைகள் அரசாங்கம் மற்றும் தனியார் துறைக்கு சொந்தமான 15 இரசாயன கூடங்களில் இடம்பெற்று வருவதாகவும் அந்த இரசாயன கூடங்களில் பணிபுரியும் சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகளை தட்டுப்பாடின்றி பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதற்கு மேலதிகமாக சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்களுக்கும்தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உடைகளை தட்டுப்பாடின்றி பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளை முறையாக முன்னெடுக்க வேண்டியது தொடர்பில் இங்கு சுகாதார அமைச்சரினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

அத்துடன் எச்சரிக்கை மிகுந்த வலயங்களில் அவசர (வெள்ளப்பெருக்கு போன்ற)அனர்த்தங்களை எதிர் கொள்ள நேர்ந்தால் அந்த பிரதேசத்தில் வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டன.

அத்தகைய தருணங்களில் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றுவது மற்றும் சுகாதார பாதுகாப்பு முறைமை தொடர்பில் பொருத்தமான செயற் திட்டங்களை தயாரிப்பது தொடர்பிலும் அமைச்சரினால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

எதிர்வரும் வெசாக் பண்டிகை காலங்களில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப் பட்டதுடன்அதற்காக விசேட ஆலோசனைகளை மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடப்பட்டது.

நேற்றைய இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் சந்ராணி ஜயவர்தன, சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜா சிங்க, பிரதி பணிப்பாளர் நாயகம் பபா பலிகவடன உள்ளிட்ட விசேட மருத்துவத் நிபுணர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 05/05/2020 - 09:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை