தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ. 5000 வழங்க வேண்டும்

சதாசிவம் பிரதமரிடம் வேண்டுகோள்

பொதுத் தேர்தல் நடைபெறாவிட்டால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டி சூழ்நிலை ஏற்படுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பையா சதாசிவம் தெரிவித்தார்.

நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றினை தொடர்ந்து சர்வதேச முதலீட்டாளர்கள் தற்போது ஆசிய நாடுகளில் முதலீடு செய்த முதலீடுகளை மீளப் பெற்று வருகின்றனர்.

அரசியல் வேற்றுமைகளை களைந்து நாடு என்ற ரீதியில் சிந்தித்து ஸ்திரமான ஒரு பாராளுமன்றத்தை உருவாக்கினால்தான் இந்த நெருக்கடி நிலையிலிருந்து விடுபட முடியும்.

5000 ரூபா கொடுப்பனவு அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டுவந்த போதிலும் பெரும்பாலான தோட்டத்தொழிலாளர்களுக்கு இது கிடைக்கவில்லை. காரணம் அதிகமானவர்கள் தோட்டத்தில் தொழில் புரிவதனால்  இந்தக் கொடுப்பனவு கிடைக்கவில்லை.

ஆனாலும் தோட்டத்தொழிலாளர்களை பொறுத்தவரையில் அதிகமானவர்கள் மிகவும் வறுமையில் தான் உள்ளனர். ஒருவர் வேலை செய்கிறார் என்பதற்காக பல குடும்பங்களுக்கு இக்கொடுப்பனவு கொடுக்காமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. இவர்கள் கொடுப்பனவுகள் பெற்ற குடும்பங்களைவிட கஷ்ட்டமான நிலையிலேயே வாழ்கின்றனர். இது தொடர்பாக நான் பிரதமரிடம் விளக்கமாக எடுத்து கூறியுள்ளேன்.

அனைத்துத் தொழிலாளர்களுக்கும் இந்த கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க வேண்டும். பிரதமர் அமைச்சரவையில் பேசி நிச்சயம் அதனை  செய்வார் என நம்புகிறேன் என்றார்.

(ஹட்டன் விசேட நிருபர்)

Tue, 05/26/2020 - 11:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை