ஓல்டன் தோட்டத்தில் உடமைகளை இழந்து தவிக்கும் 30 குடும்பங்கள்

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட  சாமிமலை ஓல்டன் கீழ் பிரிவுத் தோட்டத்தில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர்  உடமைகளை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.

மலையகத்தில் கடந்தசில தினங்களாக தொடர்ந்து  பெய்துவரும் கடும் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன் வீதிப்போக்குவரத்துகளும் மண்சரிவால் பாதிப்படைந்துள்ளன. அத்துடன், குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளமையால் மக்களின் இயல்பு   வாழ்க்கையும்  பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முதல் காலநிலையில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றனர்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஓல்டன் கீழ் பிரிவுத் தோட்டத்தில் நேற்றுமுன்தினம் பெய்த அடை மழையால் சாமிமலை கல்தோனி ஓயா பெருக்கெடுத்தமையால் ஆற்றடி பிள்ளையார் ஆலயம்  உட்பட  ஆலயத்தை சூழவுள்ள 30 குடியிருப்புகளுக்குள்  வெள்ளநீர் புகுந்தது. இதனால் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளப்பெருக்கால்   தமது உடமைகள், அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், அத்தியாவசிய  பொருட்கள், தளபாடங்கள், கால்நடைகள் ஆகியன நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் மாற்று உடைகள் கூட இல்லாது தவிப்பதாக பதிக்கப்பட்டோர் தெரிவித்தனர். மேலும் பாடசாலை மாணவர்களின் சீருடைகள், பாதணிகள் என்பன வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதோடு நேற்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்கள் தத்தமது குடியிருப்புகளுக்குள்  தேங்கி நிற்கும் கழிவுகளையும் சேறுகளையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் கிருமி நாசினி தெளிக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருவதுடன், அப்பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்குண்ட சிறுவனுக்கு  மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிப்படைந்து நிர்க்கதியான 30 குடும்பங்கள் தமது வழமையான வாழ்க்கைக்கு மீண்டுவர    உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்) 

Thu, 05/21/2020 - 13:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை