2,000 தலிபான் கைதிகளை ஆப்கான் அரசு விடுதலை

தலிபான்கள் யுத்த நிறுத்தத்தை அறிவித்ததை அடுத்து அந்த அமைப்பின் 2,000 கைதிகளை விடுவிக்கும் அறிவிப்பை ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி வெளியிட்டுள்ளார்.

நோன்புப் பெருநாளை ஒட்டி எதிர்பாராத விதமாக மூன்று நாள் யுத்த நிறுத்தம் ஒன்றை தலிபான்கள் அறிவித்த விரைவிலேயே அஷ்ரப் கானி இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைதி முயற்சியின் வெற்றிக்காக நல்லெண்ண அடிப்படையில் இந்த கைதிகள் விடுதலை இடம்பெறுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசு பேச்சுவார்த்தைகளை மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“தலிபான்கள் யுத்த நிறுத்தத்தை அறிவித்ததற்கு பதிலாக, 2,000 தலிபான்களை விடுவிக்கும் ஆரம்பக்கட்ட செயற்பாடுகளை ஜனாதிபதி கானி இன்று ஆரம்பித்தார்” என்று ஜனாதிபதியின் பேச்சாளர் ட்விட்டரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

கடும்போக்கு இஸ்லாமியவாதக் குழுவான தலிபான்கள் மற்றும் கானியின் அரசுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் தலிபான் கைதிகளின் விடுதலை முக்கிய அம்சமாக உள்ளது.

அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கு இடையில் கடந்த பெப்ரவரியில் கைச்சாத்தான உடன்படிக்கையின் ஒரு அம்சமாக கைதிகள் பரிமாற்றம் குறித்து அரசு மற்றும் தலிபான்களுக்கு இடையே கடந்த மாதம் வரலாற்று முக்கியம்வாய்ந்த நேரடி பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

எனினும் இதில் இழுபறி நீடிப்பதால் அமைதிப் பேச்சுவார்த்தையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 

Tue, 05/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை