உலகில் 2ஆவது மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ரஷ்யாவில் ‘கொவிட்-19’ தீவிரம்

பிரதமரை அடுத்து புட்டினின் பேச்சாளருக்கும் நோய்த் தொற்று

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 242,000ஐ தாண்டி இருக்கும் நிலையில் அந்நாடு அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் ரஷ்யாவில் மேலும் 10,899 நோய்த் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அந்நாட்டில் தொடர்ச்சியாக பத்தாவது நாளாகவும் 10,000க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பேச்சாளர் ட்மிட்ரி பெஸ்கொவ்வும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் மிகைல் மிசுஸ்டினுக்கு கொவிட்-19 ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் மற்றொரு உயர் அதிகாரி இவர் ஆவார்.

நாட்டின் முடக்க நிலையை தளர்த்தும் அறிவிப்பை ஜனாதிபதி புட்டின் வெளியிட்டு ஒரு நாளிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் தொழிற்சாலை மற்றும் கட்டுமானப் பணியாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை பணிக்கு திரும்பியதோடு, கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு சூழலுக்கு ஏற்ப பிராந்திய நிர்வாகங்களுக்கு புட்டின் சுதந்திரம் அளித்துள்ளார்.

ரஷ்யாவில் உறுதி செய்யப்பட்ட நோய்த் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தபோதும் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 2,212 ஆகவே பதிவாகியுள்ளது. நேற்று அந்நாட்டில் மேலும் 96 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசின் பாரிய மருத்துவ சோதனைத் திட்டமே குறைவான உயிரிழப்புக்குக் காரணம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இந்த எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை விடவும் அதிகமாக இருக்கும் என்று பலரும் நம்புகின்றனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் ஜனாதிபதியின் பேச்சாளராக இருந்து வரும் பெஸ்கொவ்வுக்கு நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

“ஆம், எனக்கு நோய் தொற்றியுள்ளது. நான் சிகிச்சை பெற்று வருகிறேன்” என்று அவர் செய்தி நிறுவனங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய பிரதமர் மிசுஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது இரண்டு வாரங்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டது. அது தொடக்கம் கலாசார அமைச்சர் ஒல்கா லியுபிமோவா, நிர்மாணத்துறை அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டது.

எனினும் ஜனாதிபதி புட்டினை ஒரு மாதத்திற்கு முன்னரே தாம் சந்தித்ததாக பெஸ்கொவ் தெரிவித்துள்ளார். தலைநகருக்கு வெளியில் இருக்கும் தமது வாசஸ்தலத்தில் இருந்து புட்டின் தனிமையில் பணியாற்றி வருவதோடு அவரது ஆரோக்கியம் சிறந்த முறையில் பேணப்பட்டு வருவதாக ரஷ்ய அரசு குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவில் ஆறு வாரங்கள் நீடித்த “பணியற்ற நாட்களை’ முடிவுக்குக் கொண்டுவருவதாக ஜனாதிபதி புட்டி கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் பலரும் பணிக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

நோய்த் தொற்று பெருதும் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவித்த ஜனதிபதி, ஆபத்து தொடர்ந்து நீடிப்பதாக எச்சரித்தார். எனினும் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளும் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்றும் வைரஸ் பரவலை தடுக்க தேவையெனில் உள்ளூர் நிர்வாகங்கள் கட்டுப்பாடுகளை விதிக்க முடியும் என்றும் அவர் அனுமதி அளித்திருந்தார்.

ரஷ்யாவில் கொவிட்-19 வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக தலைநகர் மொஸ்கோ இருப்பதோடு, அங்கு நாட்டின் மொத்த நோய்த் தொற்றாளர்கள் மற்றும் மொத்த உயிரிழப்பில் பாதிக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தலைநகர் மீதான முடக்க நிலையை மேயர் செர்கெய் சொபியானின் மே 31 ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டார். எனினும் நகரின் நிர்மாண மற்றும் தொழிற்துறை பணியாளர்கள் கட்டாயம் பணிக்கு திரும்ப வேண்டி ஏற்பட்டுள்ளது. கடைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தின்போது அனைவரும் முகக் கவசங்கள் மற்றும் கையுறைகளை அணிவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடைக்கு, வேலைக்கு அல்லது நாய்களை எடுத்துச் செல்வது தவிர்த்து குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாது என்பதோடு பயணத்திற்கான டிஜிட்டல் அனுமதிப் பத்திரம் ஒன்றை பெறுவது கட்டாயமாகும்.

தலைநகர் மொகோவில் 300,000க்கும் அதிகமானவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று நகர மேயர் முன்னர் கணித்திருந்தார். இது தற்போது உறுதி செய்யப்பட்ட நோய்த் தொற்று சம்பவங்களின் மூன்று மடங்காகும்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 3 இலட்சத்தை நெருங்கியுள்ளது. நோய்த் தொற்றியவர்கள் எண்ணிக்கை 4.3 மில்லியனைத் தாண்டியுள்ளது.

அமெரிக்காவில் மாத்திரம் தற்போது நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1.3ஐ விஞ்சியுள்ளதாக ஜோன் ஹொப்கின்ஸன் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு காட்டுகிறது. இது வேறு எந்த நாட்டை விடவும் சுமார் ஆறு மடங்கு அதிகமாகும்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸுடன் தொடர்புபட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 81 ஆயிரத்தை விஞ்சியுள்ளது. ஐரோப்பாவில் அதிக உயிரிழப்புக் கொண்ட நாடாக பிரிட்டன் மாறியுள்ளது. பிரிட்டனில் 32 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸின் உயிரிழப்பு எண்ணிக்கை ஸ்பெயினை விஞ்சி இருப்பதோடு அது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இத்தாலி நாடுகளுக்கு மாத்திரமே பின்தங்கியுள்ளது. பிரான்ஸில் புதிதாக 348 பேர் உயிரிழந்த நிலையில் அந்நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை விடவும் அதிகமாகும்.

எனினும் ஒப்பீட்டளவில் ஐரோப்பாவில் நோய்த் தொற்று வீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில் அந்த பிராந்தியத்தில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

மறுபுறம் முடக்க நிலையை தளர்த்தியதை அடுத்து வைரஸ் தொற்று சம்பவங்கள் அதிகரித்ததால் லெபனானில் முழு அளவிலான முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யா போன்றே பிரேசிலும் கொவிட்-19 தீவிரம் அடைந்துள்ளது. அந்நாட்டில் 178 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதோடு அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ஆறாவது இடத்திற்கு உயிர்ந்துள்ளது.

அதேபோன்று பிரேசிலில் நாளாந்த உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை சாதனை அளவுக்கு அதிகரித்து 881 ஆக பதிவாகியுள்ளது. இதன்மூலம் அந்நாட்டில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,400 ஆக அதிகரித்துள்ளது. எனினும் இதனை குறைத்து மதிப்பிடும் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ உடற்பயிற்சி மையங்கள் மற்றும் அழகுக்கலை நிலையங்களை மீண்டும் திறக்க முயன்று வருகிறார்.

மற்றொரு தென் அமெரிக்க நாடான கொலொம்பியாவின் லெடசியா நகரில் உள்ள சிறைச்சாலையில் மேற்கொண்ட கொரோன வைரஸ் சோதனையில் 180 கைதிகள் மற்றும் சிறை பணியாளர் ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலைத் தாக்கம் பற்றி அஞ்சிவரும் சீனா மற்றும் தென் கொரிய நாடுகளிலும் புதிய வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சீனாவில் கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக ஏழு வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகின. முந்தைய தினத்தில் அங்கு ஒருவருக்கே நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது.

நாட்டின் வட கிழக்கு நகரான ஜிலின் வைரஸ் வேகமாக பரவும் ஆபத்து மிக்க பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நகர் மீண்டும் முடக்க நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தென் கொரிய தலைநகர் சோலின் இரவு விடுதிகள் மற்றும் மதுபானக் கடைகளுடன் தொடர்புபட்ட புதிய வைரஸ் தொற்று சம்பவங்களில் மேலும் 26 தொற்றாளர்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. தென் கொரியாவில் கடந்த ஏப்ரல் நடுப்பகுதி தொடக்கம் நாள்தோறும் பதிவாகும் நோய்த் தொற்றாளர்கள் எண்ணிக்கை 15ஐ விடவும் குறைவாகவே இருந்ததோடு அது ஒரு கட்டத்தில் பூஜ்யத்திற்கு குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thu, 05/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை