கொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக

இந்த ஆண்டிலேயே இரண்டாவது அலை ஏற்படக்கூடும்

கொவிட்-19 வைரஸ் பரவல் குறைந்துவரும் நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் உடனடியாக மீண்டும் பாதிப்பு அதிகரிக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

வைரஸ் பரவலின் முதல் அலையின் மத்தியில்தான் உலக நாடுகள் இருக்கின்றன என்று அந்த அமைப்பின் நெருக்கடிநேரப் பிரிவுத் தலைவர் மைக் ர்யான் குறிப்பிட்டார். பல நாடுகளில் அது குறைந்தாலும், மத்திய, தென்னமெரிக்க நாடுகளிலும், தெற்கு ஆசியா, ஆபிரிக்கா ஆகிய வட்டாரங்களிலும் தொடர்ந்து அதிகரிப்பதாக அவர் கூறினார்.

பொதுவாகப் பெரிய அளவிலான தொற்றுநோய்கள் அலையலையாய் ஏற்படும் போக்கை டொக்டர் ர்யான் சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோயின் முதல் அலை இப்போது ஓய்ந்தாலும், இந்த ஆண்டிலேயே இரண்டாவது அலை ஏற்படக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

முதல் அலையின்போது பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அவசரப்பட்டு நீக்கப்பட்டால், இரண்டாவது முறை பாதிப்பு வெகுவாக அதிகரிக்கும் என்றார் அவர்.

ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகள் பொதுச் சுகாதாரக் கட்டுப்பாடுகளையும், சமூக அளவிலான நடவடிக்கைகளையும் தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும் என்று டொக்டர் ர்யான் வலியுறுத்தினார். அந்த வட்டாரங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வேளையில் அவரது எச்சரிக்கை வெளிவந்துள்ளது. இதன்போது அவர் மேலும் கூறியதாவது,

“கொரோனா வைரஸ் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் புதிய மரணங்கள் மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

எந்த நேரத்திலும் வைரஸ் பரவுவது அதிகரிக்கலாம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். வைரஸ் பரவுவது குறைந்து வருவது போல் தெரிந்தாலும் அது தொடர்ந்து குறையும் என எண்ண முடியாது.

இரண்டாவது அலை ஏற்பட பல மாதங்களும் செல்லலாம். இது முதலாவது ஆலை என்றாலும் உச்சமான இரண்டாவது அலை சந்தர்ப்பம் ஏற்படக் கூடும்“ எனவும் மைக் ர்யான் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் உள்ள ஓர் இறைச்சி சந்தையில் தொடங்கியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 5.6 மில்லியனாக அதிகரித்திருப்பதோடு இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்றரை இலட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்த வைரஸினால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தற்போது படிப்படியாக முடக்க நிலையை தளர்த்தி வருகின்றன.

மறுபுறம் பிரேசிலில் வைரஸ் தொற்று உச்சமடைந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நாடாக மாறியுள்ள பிரேசிலில் 376,000க்கும் அதிகமானவர்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதோடு 23,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 11,000 பேருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றின் புதிய மையமாக  பிரேசில் உருவாகியுள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா  முதல் இடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில் பிரேசிலில் இருந்து மக்கள் வருவதை  அமெரிக்கா  தடை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கையில் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ அலட்சியமாக நடந்து வருவதாக உலக அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா தொற்று  ஜூன் மாதம் மேலும் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் அமெரிக்காவில் உள்ள பெருநகரங்கள், சிறு நகரங்கள் போக தற்போது அமெரிக்காவின் கிராமப்புற ஊர்களிலும் கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கையும் மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் வைரஸ் பாதிப்பு, மரணம் அதிகமுள்ள நியூயோர்க்கை விடவும் ஊரகப்பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை விரைவாக அதிகமாவதாகவும் மரண எண்ணிக்கை உயர்வதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,06, 226 ஆக அதிகரிக்க மரண எண்ணிக்கை 1 லட்சத்துக்கு அருகில் 99,805 ஆக உள்ளது. இந்நிலையில் நியூயோர்க், மிச்சிகன், லூசியானா, வொஷிங்டன் ஆகியவற்றின் 14 ஊரகப் பகுதிகள் கொரோன பாதிப்பு அதிகம் உள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் ஆய்வு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிக முக்கிய நகரங்களைத் தாக்கி வரும் கொரோனா அந்நாட்டின் ஊரகப்பகுதிகளிலும் வெகுவிரைவில் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் அதிமான விளை நிலங்கள், இறைச்சி ஆலைகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளும் குறைவு. இன்னும் கண்டுபிடிக்கப்படாத கொரோனா தொற்றுக்கள் இப்பகுதியில் இருக்கக் கூடும் என்று டெக்சாஸ் பல்கலைக் கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்பகுதிகளில் வறுமை, வாகனம் சென்றடைய முடியாத தன்மை, நெரிசலான வீடுகள் ஆகியவற்றால் இவர்களுக்கு வைரஸ் பரவினால் மரணம்தான் ஏற்படும் குணமடைய வாய்ப்பில்லை என்று வொஷிங்டன் போஸ்ட் எச்சரித்துள்ளது.

Wed, 05/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை