கொவிட்-19: பிரேசிலில் நோய்த் தொற்றாளர்கள் எண்ணிக்கை இத்தாலி, ஸ்பெயினை விஞ்சியது

டிரம்ப்பை கடுமையாக சாடும் ஒபாமா

கொரோன வைரஸ் தொற்றின் முந்தைய மையப் புள்ளிகளாக இருந்த இத்தாலி மற்றும் ஸ்பெயினை விஞ்சி உலகில் அதிக நோய்த் தொற்று உள்ள நாடுகள் வரிகையில் பிரேசில் நான்காவது இடத்திற்கு வேகமாக முன்னேறியுள்ளது. எனினும் இந்த வைரஸ் மற்றும் முன்னெடுக்கப்படும் முடக்க நிலை குறித்து பிரேசில் ஜனாதிபதி பொல்சோனாரோ தொடர்ந்தும் குறைமதிப்பிட்டு வருகிறார்.

வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கையில் பிரேசில் கடந்த சனிக்கிழமை இத்தாலி மற்றும் ஸ்பெயினை தாண்டி அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் நான்காவது இடத்திற்கு வந்ததாக உத்தியோகபூர் சுகாதார கணக்கெடுப்புகள் காட்டின.

அந்நாட்டில் புதிதாக 14,919 சம்பவங்கள் பதிவான நிலையில் நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 233,142 ஆக அதிகரித்துள்ளதாக பிரேசில் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றினால் கடந்த சனிக்கிழமை முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் 816 உயிரிழப்புகள் பதிவானதை அடுத்து பிரேசிலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15,633 ஆக உயர்ந்துள்ளது.

எனினும் நாட்டில் முன்னெடுக்கப்படும் குறைவான சோதனைகள் காரணமாக பாதிப்பின் உண்மையான எண்ணிக்கை கூறப்படுவதை விடவும் 15 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும் அதன் மோசமான நிலை இன்னும் வரவில்லை என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரேசிலில் நிலைமை மோசமடைந்து வரும் நிலையிலும் இதன் தீவிரத் தன்மை குறித்து அந்நாட்டு ஜனாதிபதி குறைவாகவே மதிப்பிட்டு வருகிறார். இதனை ஒரு ‘சிறிய காய்ச்சல்’ என்று அவர் நிராகரித்துள்ளார்.

வைரஸை கட்டுப்படுத்துவதற்கு சில ஆளுநர்கள் முன்னெடுத்து வரும் முடக்க நடவடிக்கை குறித்தும் பொல்சோனாரோ விமர்சித்து வருவதோடு வர்த்தகங்களை மீண்டும் திறக்கும்படி அழைப்பு விடுக்கிறார்.

அவரது இந்த நடத்தையால் பிரேசிலில் கடந்த ஒருசில மாதங்களுக்குள் இரண்டு சுகாதார அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரேசிலை விடவும் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரிட்டனில் மாத்திரமே நோய்த் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக தற்போது நோய் பாதிப்பு தீவிரம் அடைந்திருக்கும் ரஷ்யாவில் நேற்று மேலும் 9,709 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் ஒட்டுமொத்தமாக இதுவரை 281,752 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அந்நாட்டு கொரோனா வைரஸ் செயலணி அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்திற்குள் 94 பேர் உயிரிழந்த நிலையில் அந்நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,631 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 1,507,798 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 90,113 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பிரச்சினையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையாளும் விதம் குறித்து, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா விமர்சனம் செய்துள்ளார்.

“பல தலைவர்களும், அதிகாரிகளும் தாங்கள் பொறுப்பில் இருப்பதை உணரவில்லை. நமது நாட்டுத் தலைமையில் இருக்கும் தோல்விகளை இந்த கொரோனா பெருந்தொற்று நமக்குக் காட்டியுள்ளது’என மாணவர்கள் மத்தியில் ஒன்லைனில் உரையாடிய ஒபாமா தெரிவித்துள்ளார்.

எனினும் ஐரோப்பாவில் கொரோனா மரணங்கள் குறைந்து வருகின்றன. கொரோனாவின் மையமாக இருந்த இத்தாலியில் கடந்த மார்ச் 27ஆம் திகதி 900 மரணங்கள் ஏற்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை 262 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டனிலும் மரணங்கள் குறைந்து வருகின்றன. மார்ச் 13 க்குப் பின்னர் டென்மார்க்கில் முதல் முறையாக புதிய கொவிட் -19 இறப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால் ஐரோப்பாவெங்கும் தற்போது முடக்க நிலை படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

இதில் இத்தாலி அதன் நடமாட்டக் கட்டுப்பாடுகளை இன்றிலிருந்து தளர்த்துகிறது. கடைகள், உணவகங்கள், மதுக்கூடங்கள் ஆகிய அனைத்தும் இன்று முழுமையாகச் செயல்பட ஆரம்பித்தது.

சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இந்த வார இறுதியில் எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்த உள்ளன. ஜூன் மாதம் நடுவில் பிரான்சும் கட்டுப்பாடுகளை தளர்த்த உள்ளது.

எனினும் ஐரோப்பாவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுவதற்கான முடக்க நிலையை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாகப் பாதுகாப்பு இடைவெளி போன்ற விதிமுறைகளை அமுல்படுத்துவதில் அதிகாரிகள் சிரமத்தைச் சந்திக்கின்றனர்.

ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்துப் பலரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அரசாங்கத்தின் விதிமுறைகள் குறித்துக் கருத்துரைக்கும்படி சுமார் 200 ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர். ஒரு மணிநேரம் நீடித்த ஆர்ப்பாட்டத்தை பொலிஸ் அதிகாரிகள் கலைத்தனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா தொற்று இல்லாத நாடாக கம்போடியா அறிவித்துக்கொண்டது

மறுபுறம் நேபாளத்தில் கொவிட்-19 வைரஸ் தொற்றால் முதல் மரணம் நேர்ந்துள்ளது. 29 வயதுப் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். தலைநகர் காத்மாண்டுவுக்கு 90 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சிந்துபல்சோக் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது வழியிலேயே மாண்டார். அந்தப் பெண் இம்மாதம் ஆறாம் திகதி ஒரு குழந்தையை ஈன்றெடுத்தார்.

நேப்பாளத்தில் வைரஸ் தொற்றால் 281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில், இதுவரை 100,000க்குக் குறைவான பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன,

பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவு என்பதால் நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 4.7 மில்லியனைத் தாண்டி இருப்பதோடு உயிரிழப்பு 3 இலட்சத்தை விடவும் அதிகமாகும்.

Mon, 05/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை