ஊரடங்கு விதிமுறை மீறிய 12 ஆயிரம் பேருக்கு வழக்கு

இன்று இரவு 8.00 மணி முதல் திங்கள் அதிகாலை வரை நாடு முழுவதும் ஊரடங்கு

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய மற்றும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்திய 55 ஆயிரம் பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன நேற்று தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களுள் 12ஆயிரம் பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 5 ஆயிரத்து 400 பேருக்கு எதிராக நீதிமன்றம் குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கமைய குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை, தண்டப்பணம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொவிட்–19ஐ கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது,

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

இக்காலப்பகுதியில் அனைவரும் ஊரடங்குச் சட்ட விதிமுறைகளையும் சுகாதார வழிகாட்டல்களையும் முறையாகப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்யாதவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்.

கொவிட்–19ஐ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஒரு இலட்சத்து 15 ஆயிரம் பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 85 ஆயிரம் பேர் சுய தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்தமைக்கான மருத்துவச் சான்றிதழையும் பெற்றுள்ளனர்.

அவர்களது செயற்பாடுகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றனர்.

வார இறுதி நாட்களில் மதுபானசாலைகளில் ஆள்நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் ரோந்து சேவை அமுலில் இருக்குமென்றும் அவர் தெரிவித்தார்.

லக்ஷ்மி பரசுராமன்

Sat, 05/16/2020 - 09:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை