மஜீத்புரம், வளத்தாப்பிட்டி மக்களுக்கு உலருணவுப் பொதிகள் பகிர்ந்தளிப்பு

சம்மாந்துறை பிரதேச செயலக கொரோனா ஒழிப்பு செயலணி, சம்மாந்துறை பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர் சபை ஆகியவற்றின் வழிகாட்டல் மற்றும் சம்மாந்துறை நலனுக்கும் அபிவிருத்திக்குமான சம்மேளனத்தின் பங்களிப்புடன் சுமார் 05 ஆயிரம் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கும் இரண்டாங்கட்டப் பணி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைக் கிராமங்களான மஜீத்புரம், வளத்தாப்பிட்டி பிரதேசங்களில் வதியும் மக்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

நாளாந்தம் கூலித்தொழில் பாதிக்கப்பட்டு, வருமானமிழந்துள்ள, குடும்பங்களின் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இவ்வுலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம்.கபீர், சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஸிக், முன்னாள் பல்கலைக்கழகப் பதிவாளர் ஏ.எல்.ஜௌபர் சாதிக், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்-ஷூரா, அனைத்துப் பள்ளிவாயல்கள் சம்மேளனம், சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபை என்பனவற்றின் நிர்வாகிகள் ஆகியோர் நிகழ்வுகளில் கலந்து கொண்டு மக்களுக்கான உலருணவுப் பொதிகளைக் கையளித்தனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் அச்சம், ஊரடங்கு காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் தொழிலின்றியும், தினசரி வருமானமிழந்தும் பாதிக்கப்பட்டு, வீடுகளில் முடங்கியுள்ள வறிய குடும்பங்களுக்கு உணவு மற்றும் உலருணவு ஏனைய மனிதாபிமான வாழ்வாதார உதவிகளை வழங்கும் பணிகள், தொடர்ந்தும் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(ஐ.எல்.எம். றிஸான் - அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

Wed, 04/15/2020 - 11:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை