நிதி செலவிடுவது தொடர்பில் நெருக்கடி கிடையாது

புதிய பாராளுமன்றம் தெரிவாகி 03 மாதம் வரை கட்டுப்பாடின்றி செலவிட ஜனாதிபதிக்கு அதிகாரம்

நாட்டுக்குத் தேவையான நிதியை செலவிடுவது தொடர்பில் அரசியலமைப்பு ரீதியான எந்த நெருக்கடி நிலையும் ஏற்படவில்லை. புதிய பாராளுமன்றம் தெரிவாகி மூன்று மாதங்கள் வரை எந்தவித கடன் எல்லையுமின்றி எந்தச் செலவும் செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரமிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்கத்திற்கு நிதி பெறுவதில் நெருக்கடி நிலை ஏற்படும். இதற்காக பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டுமெனவும்  கூறப்படுவது குறித்து இங்கு வினா எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

இது சர்வதேச மட்டத்தில் சிலர் பரப்பும் சிறுபிள்ளைத்தனமாக பிரசாரமாகும். அரசியலமைப்பிற்கமைய நிதி தொடர்பான முழுமையான அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருக்கிறது. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதியை தவிர வேறு எவருக்கும் எக்காரணம் கொண்டும் மீள கூட்ட முடியாது. அவசரகால சட்டத்தை அறிவிக்கவும் அதனை திருத்தவும் மாத்திரமே அவரால் பாராளுமன்றத்தை மீள கூட்ட முடியும். வேறு எக்காரணத்திற்காகவும் பாராளுமன்றத்தை கூட்ட முடியாது. மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான எந்த தேவையும் கிடையாதென ஜனாதிபதி கூறியுள்ளார். பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டும் தேவையில்லை என ஜனாதிபதி அமைச்சரவையிலும் அறிவித்துள்ளார். அரசியலமைப்பை செயற்படுத்துவதற்கான முழுமையான அதிகாரத்தை மக்கள் அவருக்கு வழங்கியுள்ளனர். நான்கரை வருடத்தின் பின்னர் அவர் பாராளுமன்றத்தை கலைத்தார். சட்டபூர்வமாக அவர் இதனை செய்தார். புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு மூன்று மாதங்கள் வரை எந்த வித கடன் எல்லையுமின்றி எந்தச் செலவும் செய்ய அதிகாரம் ஜனபதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சட்டவல்லுநர்களும் அவருக்கு விளக்கமளித்துள்ளனர். (பா)

ஷம்ஸ் பாஹிம்

Fri, 04/24/2020 - 07:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை