'கொரோனாவை விட பட்டினியால் செத்துவிடுவோம்'

லெபனானில் இறங்கி மக்கள் போராட்டம்

வருமானம் இல்லாமல் வறுமை காரணமாக வைரசை விட பட்டினியால் உயிரிழந்து விடுவோம் என கூறி லெபனானில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லெபனான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான ஒரு சிறிய நாடு. இந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சிரியாவுடனும்  தெற்கே இஸ்ரேலையும்  மேற்கே மத்திய தரைக்கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியது முதல் இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக லெபனானில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பொருளாதார நிலைத்தன்மையின்மை  வேலைவாய்ப்பின்மை  வறுமை போன்ற காரணங்களால் லெபனானின் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் இலட்சக்கணக்கானோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வீதிகளில் இறங்கி போரடத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையில்  உலகையே உலுக்கி வரும் கொரோனா லெபனானிலும் பரவத்தொடங்கியுள்ளது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்.

வைரஸ் வேகமாக பரவி வருவதால் அந்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் தங்கள் வேலைகளையும்  வருமானத்தையும் இழந்துள்ளனர். இதனால் வறுமை காரணமாக போதிய உணவு கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில்  கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் லெபனானின் பல்வேறு பகுதிகளில் குவிந்த மக்கள் அரசுக்கு எதிராக  வீதிகளிலும் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய மக்கள் வீதிகளில் தடுப்புகளை ஏற்படுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஆனால்  வீடுகளை விட்டு வெளியே வந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும்  முகமூடியை அணியாமலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதனால் வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாடு சுகாதாரத்துறை மந்திரி குற்றச்சாட்டி வருகிறார்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்களில் ஒருவர் கூறுகையில்  ‘’ சாப்பிட உணவே இல்லாதபோது நாட்டில் வைரஸ் பரவுவது குறித்து நான் ஏன் அக்கறை கொள்ள வேண்டும். நானும் என் குடும்பமும் எப்படியும் உணவின்றி பட்டினியால் சாகத்தான் போகிறாம்’’ என்றார்.

அதேபோல் மற்றொரு போராட்டக்காரர் கூறுகையில்  தனது 11 வயது மகனுக்கு உணவளிக்க போதிய பணம் இல்லை என்றார்.

இதற்கிடையில்  வீதிகளில் இறங்கி போரட்டத்தில் ஈடுபட்டுவந்த போராட்டக்காரர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின் போது தங்கள் கண்ணில்பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள் அவற்றை தீவைத்தும் கொளுத்தினர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த கூடுதல் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டில் பரபரப்பான சூழல்நிலவி வருகிறது.

கொரோனா வைரசும்  ஊரடங்கும் வறுமைக்கு வழி வகுத்து பட்டினியால் மக்கள் பலர் உயிரிழக்கும் சூழல் உருவாகி வருவதால் உலக நாடுகள் செய்வதறியாது திகைத்து வருகின்றன.

Wed, 04/29/2020 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை