உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது-2 Suspects Helped-Cinnamon Grand-Kochchikade Church-Bomber Arrested-CID-SP Jaliya Senaratne

சின்னமன் கிராண்ட், கொச்சிக்கடை தாக்குதலுக்கு உதவினர்

ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்குதல்தாரிகளுக்கு உதவிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று (02) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் அதனை மேற்கொண்ட தாக்குதல்தாரிக்கு உதவிய நபர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபரை கைது செய்ததன் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

அதில் ஒருவர் கொத்தட்டுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரியின் குண்டுகளை எடுத்துச் செல்ல வசதிகள் மேற்கொண்டுள்ளதுடன், அவருடன் தொடர்பாடலை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் மற்றைய நபர் மட்டக்குளி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட நபருக்கு உதவி புரிந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

தற்பொழுது இடம்பெற்று வரும் விசாரணைகளின் மூலம் மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்ய முடியாத சந்தேக நபர்கள் தொடர்பில் தற்போது எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 12 மாதங்கள் ஆகின்றன அந்த வகையில் தற்போது அது தொடர்பான விசாரணைகள் புதிய தோற்றத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் இவ்விசாரணைகளை மிக விரைவாக முடித்து இத்தாக்குதல்கள் தொடர்பில் உதவியவர்கள் இதற்கு பின்னால் உள்ள நபர்கள் தொடர்பில் தகவல்கள் அனைத்தையும் பெறமுடியும் என நாம் நம்புகின்றோம். அது தொடர்பான வெற்றிகரமாக தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன அதனை நாங்கள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிட முடியாதுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்தன தெரிவித்தார்.

Thu, 04/02/2020 - 20:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை