கண்களுக்குத் தெரியாத எதிரியுடன் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்!

'மதவழிபாட்டு இடங்களில் ஒன்றுகூடி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்; மனம்தான் பரிசுத்தமான கோயில்'

'நம் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைக்கிறார்கள்' என்று இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது மிக வேகமாகப் பரவி வருகிறது. தடுப்பு ஊசிகளும் மருந்துகளும் இல்லாத நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள் , உடல் நலம் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு ஒருவர் தும்மல், இருமல், சளி மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் தொற்றில் மக்கள் தப்பிக்க வேண்டுமெனில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் . வீட்டிலேயே இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அரசுகளும் அறிவுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

' எந்த சுயநலமும் இல்லாமல் மருத்துவமனைகளில் தைரியமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்த மோசமான தொற்று பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்கள் இதை கையாள எவ்வளவு தயாராக இருந்தார்கள் என்று பார்க்கும் போது மனம் நிறைந்து விட்டது. நம் உயிரைக் காப்பாற்ற அவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைக்கிறார்கள்.

உலகையே தலைகீழாக மாற்றி உள்ள இந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு எதிராக நாம் அனைவரும் நமது வித்தியாசங்களை மறந்து ஒன்றிணைய வேண்டிய நேரமிது.  நமது பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு, மக்களுக்கு, வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, புலம்பெயர்ந்த பணியாளர்களுக்கு உதவி செய்வோம். கடவுள் உங்கள் மனதில் இருக்கிறார். அதுதான் மிக பரிசுத்தமான கோயில்.

மத வழிபாட்டு இடங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல. அரசுகளின் அறிவுரையைக் கேளுங்கள். தனிமைப்படுத்திக் கொண்டு சில வாரங்கள் இருந்தால் பல வருடங்கள் ஆயுள் கிடைக்கும்.  சக மனிதருக்கு தீங்கு ஏற்படுத்தாதீர்கள். இந்தக் கிருமி உங்களிடம் இருக்கிறது என்பதைக் கூட உங்களுக்கு எச்சரிக்காது. எனவே உங்களுக்கு தொற்று இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இது வதந்திகளை பரப்பி இன்னும் பதற்றத்தை அதிகரிக்கும் நேரமல்ல.'

இவ்வாறு தனது பதிவிலே  ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.

இதுஒருபுறமிருக்க, 'மசூதிகளில் இருங்கள். கொரோனாவிலிருந்து நாம் காப்பாற்றப்படுவோம்' என இந்தியாவில் தலைமறைவாக உள்ள தவ்லீஜீ ஜமாத் தலைவர் மவுலானா சாத் கூறுவது போன்ற பழைய ஓடியோ வெளியாகியுள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் கடந்த மார்ச் முதல் வாரத்தில் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஒரு வழிபாட்டுத் தலத்தில் மத மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 824 வெளிநாட்டினர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஏராளமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய அந்தந்த மாநிலங்கள் முயற்சித்து வருகின்றன. இந்த நிலையில் இந்த மாநாட்டை அறிவித்து பெருங்கூட்டத்தைக் கூட்டி நோய் பரவக் காரணமாக இருந்ததாக தவ்ஜீலீ ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலானா சாத் மீது வழக்குப் பதிவு செய்து பொலிஸார் அவரைத் தேடி வருகின்றனர். 54 வயதான மவுலானா சாத், மதபோதகராவார். இவர் தவ்ஜீலீ ஜமாத்தின் நிறுவனர் முகமது இலியாஸ் காந்த்லவியின் கொள்ளுப் பேரன் ஆவார்.

இந்த நிலையில், இவர் பேசுவது போன்ற ஒரு பழைய ஓடியோ வெளியாகியுள்ளது. அந்த ஓடியோ நிஜாமுதீனில் மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அவர் பேசியது போல் இருக்கிறது.

'மருத்துவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மக்களை சந்திப்பதையோ தொழுகையை கைவிடுவதையோ செய்யும் நேரம் இதுவல்ல. கடவுள் உங்களுக்கு நோயை கொடுப்பாரேயானால் அதிலிருந்து நம்மை மருத்துவர்களாலும் மருந்துகளாலும் காப்பாற்ற முடியாது. மசூதிகளுக்கு கூட்டமாக செல்லுங்கள். கொரோனா வைரஸுக்காக மசூதிக்கு செல்ல வேண்டாம் என்றும் மசூதிகளில் இருக்க வேண்டாம் என்றும் கூறுவோரை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன். மசூதிக்குச் சென்றால் இறந்து விடுவீர்கள் என யாராவது சொல்வதை கேட்டு நீங்கள் அவ்வாறே நினைத்தால் அது தவறு'.

இவ்வாறு அவர் கூறுவது போன்ற பழைய ஓடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறான சர்ச்சையை அடுத்தே ஏ.ஆர். ரகுமான் மாத்திரமன்றி அவர் போன்ற பிரபலங்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் விதத்தில் வேண்டுகோள்களை முன்வைத்து வருகின்றனர்.

Fri, 04/03/2020 - 12:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை