கொரோனாவுக்கு மத்தியில் தென் கொரிய தேர்தல்; ஆளும் கட்சி வெற்றி

தென்கொரியாவில் நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில், ஆளும் கட்சி  பாரிய வெற்றி பெற்றுள்ளது.

ஜனாதிபதி மூன் ஜே இன் தலைமையிலான ஜனநாயகக் கட்சியே இவ்வாறு வெற்றி பெற்றுள்ளது.

தென்கொரியாவில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பாராளுமன்றத் தேர்தல் நேற்று (15) அமைதியான முறையில் நடத்தப்பட்டது.

அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், 300  ஆசனங்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில் ஜனாதிபதி மூனின் ஜனநாயகக் கட்சி 163 ஆசனங்களை பெற்றுள்ளது. 

இதன் சகோதர கட்சியான பிளாட்போம் ( Platform) கட்சி 17 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது. இதனால் அரசாங்கத்திற்கு மொத்தம் 180  ஆசனங்கள் கிடைத்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஆரம்பித்ததை அடுத்து, வாக்களிப்பு இடம்பெற்ற முதல் நாடாக தென்கொரியா அமைகின்றது.

வாக்களிப்பின்போது, கட்டுப்பாடான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அந்நாட்டில் வாக்களிப்புகள் இடம்பெற்றன.

வாக்காளர்கள் கைகளை  சுத்தம் செய்வதற்கான கிருமிநாசினியைக் (sanitiser) கொண்டு  சுத்தம் செய்ய வேண்டும் என்பதோடு, முகக் கவசங்கள் மற்றும் கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.  குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளியில் வாக்காளர்கள் நிற்க வேண்டும் என்பதோடு,  வெப்பமானி சோதனைக்கு பின்னர் வாக்குச்சாவடிகளுக்குள் உள்நுழைய வாக்காளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது சுமார் 60,000 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 04/16/2020 - 11:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை