மலையகத்தில் சமுர்த்தி கொடுப்பனவில் பாகுபாடு; மக்கள் குற்றச்சாட்டு

மலையக பெருந்தோட்ட பகுதியில் சிறு அளவில் விவசாயத்தில் ஈடுபடுகின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சமுர்த்தி கொடுப்பனவுகளையும் ஏனைய கொடுப்பனவுகளையும் வழங்க முடியாது என கிராம சேவகர்கள் தெரிவிப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் கூறியவை வருமாறு,

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக அனைவரும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் அரசாங்கம் வழங்குகின்ற உதவு தொகைகளை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக இந்த உதவு தொகைகளை அரசாங்கம் கிராம சேவகர்களின் சிபாரிசின் பெயரிலேயே வழங்குகின்றன. எனவே கிராம சேவகர்கள் சிபாரிசு செய்யாத எவருக்கும் இந்த உதவு தொகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஒரு சில கிராம சேவகர்களின் அசமந்த போக்கு காரணமாகவும் கட்சி இன,மத அடிப்படையில் செயல்படுவதன் காரணமாகவும் இந்த உதவு தொகைகளை பெற்றுக் கொள்வதில் சிக்கலான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அநேகமான கிராம சேவகர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதையும் காண முடிகின்றது.

இவ்வாறான இக்கட்டான ஒரு நிலையில் கிராம சேவகர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது  காலத்தின் கட்டாயமாகும்.

மேலும் ஒரு சில கிராம சேவகர்கள் பெருந்தோட்டப் பகுதிகளில் வேலையின்றி இருக்கின்றவர்களுக்கு சமுர்த்தி உட்பட ஏனைய கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுப்பதில் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் பொது மக்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் ஒரு சில கிராம சேவகர்கள் பல முறை தங்களை அவர்களுடைய காரியாலயங்களுக்கு வருகை தருமாறு கூறி அவர்களை வீணே காலத்தை கடத்துவதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர். இது தொடர்பாக தொழிற்சங்கங்களும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

Wed, 04/08/2020 - 08:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை