நுவரெலியா மாவட்டத்தில் உரத்திற்கு தட்டுப்பாடு; விவசாயிகள் கவலை

நுவரெலியா மாவட்டத்தில் இரசாயன உரத்திற்கு பெரும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

நுவரெலியாவில் கடந்த 9ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் நுவரெலியா நகர பழையக்கடை வீதியிலுள்ள விவசாய உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் 50 கிலோ எடையுள்ள 1150 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டிய உரத்தை 1500 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக உரத்தை கொள்வனவு செய்த மரக்கறி உற்பத்தியாளர்கள் குற்றம் சுமத்தினர்.

நுவரெலியா மாட்டத்திலுள்ள நுவரெலியா, கந்தப்பளை, பொரலந்த, ராகலை, நானுஓயா, தலவாக்கலை, அக்கரப்பத்தனை, டயகம உட்பட பல பிரதேசங்களில் மரக்கறி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயன உர வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் குறிப்பிட்ட காலத்தில் மரக்கறிகளுக்கு பசளையிட முடியாமல் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

நுவரெலியாவிலுள்ள ஒரு சில வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரம் ஊரடங்குச் சட்டம் அமுலில் இல்லாத வேளையில் கொழும்பிலிருந்து உரம் கொண்டுவரப்பட்டாலும் தங்களது வர்த்தக நிலையத்தில் தொடர்ந்து உரம், கிருமிநாசினிகளை பெற்றுக்கொள்ளும்   வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் உரம் விற்பனை செய்வதுடன்,   ஒரு சில இடங்களில் 1150 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டிய உரத்தை 1300 ரூபா முதல் 1500 ரூபா வரை அதிகரித்து விற்பனை செய்வதாகவும் விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி உற்பத்தியில் அதிகமானோர் ஈடுபட்டு வருகின்றனர். பெரும் தொகையான தோட்டத் தொழிலாளர்களும் மரக்கறி தோட்டத் தொழிலையே நம்பி தங்களது வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றனர்.

எனவே நுவரெலியா மாவட்ட மரக்கறி உற்பத்தியை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உரம் பெற்றுக்கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(தலவாக்கலை குறூப் நிருபர்)

Fri, 04/17/2020 - 09:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை